Vijay: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த விஜய்! யார் பெயரில் அர்ச்சனை செய்தார் தெரியுமா?

  • மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முதல்வர் விஜய் சென்ற போது அவர் யார் பெயரில் அர்ச்சனை செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அம்மனின் வரலாறு குறித்தும் அவர் கேட்டறிந்தாராம்.

    Advertisement

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க செப்டம்பர் 28ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

    Advertisement

    விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு முட்டி போட்ட படியே தங்க மோதிரத்தை அணிவித்திருந்தார். அது போல் எல்லா குழந்தைகளையும் தூக்கி வைத்து கொஞ்சினார். குழந்தைகளின் தாய்மார்கள் கேட்டதற்கிணங்க செல்பி எடுத்துக் கொண்டார்.

    பிரசவ வார்டு

    இந்த நிகழ்வை முடித்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்த குழந்தைகளுக்கும் தங்கமோதிரத்தை வழங்கினார். பிறகு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவர் அல்லாத ஊழியர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

    இதையடுத்து அங்கிருந்து ரோடு ஷோவாக ராணி மங்கம்மா அரண்மனை வளாகத்தில் உள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கு மியூசியம் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

    Advertisement

    காந்தி சிலைக்கு மரியாதை

    வளாகத்தில் இருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து புனரமைக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்து வைத்தார்.

    இதையடுத்து மதிய உணவு இடைவேளை, சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மாலை 4.15 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விஜய் வருகை தந்தார். சித்திரை வீதியில் அம்மன் சன்னதி வாசலில் இறங்கி அங்கிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தார். அமைச்சர் ரமேஷ், அறங்காவலர் குழுத் தலைவரும், பிடிஆரின் தாயாருமான ருக்மணி தலைமையிலான அறங்காவலர்கள் விஜய்யை வரவேற்றனர். அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இந்த கோயிலுக்கு வந்த விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அர்த்த மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்தார்.

    Advertisement

    சிவாச்சாரியார்கள்

    பின்னர் கோயில் வரலாறு குறித்து சிவாச்சாரியார்களிடம் விஜய் கேட்டறிந்தார். பொற்றாமரைக்குளத்தை பார்த்துவிட்டு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். அப்போது அர்ச்சனை செய்ய, சிவாச்சாரியார்கள், யார் பெயருக்கு அர்ச்சனை என கேட்டனராம்.

    ஏற்கெனவே விஜய்யின் ராசி நட்சத்திரம் கடகம்- பூசம் என்பது சிவாச்சாரியார்களுக்கு தெரியும் என்பதால் யார் பெயரில் அர்ச்சனை என்பதை மட்டும் கேட்டனராம். உடனே விஜய், "விஜய் அன்ட் பேமிலி" என கூற அப்படியே அர்ச்சனை செய்யப்பட்டது.

    அர்ச்சனை

    சுவாமி சன்னதிக்கு செல்வதற்கு விஜய்யிடம் ஏற்கெனவே உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. அதாவது மாற்று மதத்தினர் மீனாட்சி சன்னதிக்கு செல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் சுவாமி சன்னதிக்கு செல்ல தடை உள்ளது. இதனால் தனக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கும் படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.

    Advertisement

    2 மணி நேரம் முன்பே

    அது போல் விஜய்யும் கோயிலுக்கு வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே கையெழுத்திட்டு விட்டார். இதையடுத்து சுவாமி சன்னதியில் தரிசனத்தை முடித்த விஜய், அங்கிருந்த கொடிமரத்தின் முன்பு பிரார்த்தனை செய்தார். சுமார் 1 மணி நேரம் கோயிலை சுற்றி பார்த்து வழிபட்ட மாலை 6 மணிவாக்கில் மதுரை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தார்.

    English Summary

    Do you know at whose name CM Vijay performed Archana in Madurai Meenakshi Temple? He said Vijay and Family to do archana!