மதுரை: திமுக தலைமை வயது வரம்பு தொடர்பாக சில விதிமுறைகளை போட்டிருந்தாலும், என்னுடைய மாவட்டத்தில் எந்த விதிகளும் சீனில் இருக்காது என்று முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞரணி நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் காதுகளுக்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றிருக்கின்றனர்.
திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன. ஏற்கனவே 110 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியான நிலையில், அடுத்ததாக உட்கட்சி தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக 110 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க திமுக தலைமை முடிவு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது.
இதனிடையே மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட வயது வரம்புக்கு கொண்டு வரப்பட்ட விதிகளில் கொஞ்சம் தளர்வு கொடுக்க வேண்டும் என்றும், 70 என்ற வயது வரம்பை 75ஆக உயர்த்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அந்த வேண்டுகோளை ஏற்கவில்லை. இதனால் திமுகவில் வயது வரம்பு விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியது. திமுக செயற்குழுவில் எடுக்கப்பட்ட புதிய விதிகளின்படி மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 75, பேரூராட்சி, நகர மற்றும் பகுதிச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 60, கிளைச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 45 மற்றும் நகராட்சி, மாநகராட்சி வார்டு செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் பதவியை இழக்க நேரிடும் நிலை உருவாகி இருக்கிறது. இதனிடையே மதுரை மாவட்ட திமுக சார்பாக கடந்த வாரம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் மறுசீரமைப்பு தொடர்பாகவும் பேச்சுகள் வந்துள்ளன. அப்போது மூர்த்தி, சில விதிகளை கட்சித் தலைமை கொண்டு வந்திருந்தாலும், நான் பொறுப்பில் இருக்கும் மாவட்டத்தில் எந்த வயது வரம்பும் கிடையாது. மதுரை கிழக்கு மாவட்டத்திற்கு நான்தான் மாவட்டச் செயலாளர்.. இங்கே ஒன்றிய, நகர, பகுதி, கிளைச் செயலாளர்களாக இருப்பவர்கள் அப்படியே பதவியில் தொடர்வார்கள் என்று கூறி இருக்கிறார். இதனால் சீனியர்கள் நிம்மதி அடைய, இளைஞரணி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை அப்படியே உதயநிதி ஸ்டாலின் காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் மதுரை திமுகவில் விரைவில் மாற்றம் வரலாம் என்று பார்க்கப்படுகிறது.