FQL ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. பொதுமக்கள் சாலை மறியல்!

  • மதுரை: பணத்தை இரட்டிப்பாக்குவதாக FQL ஆன்லைன் செயலி மூலம் நடந்த மோசடியில் பாதிக்கப்பட்ட நத்தம் பகுதியைச் சேர்ந்த ராசு என்ற இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் திண்டுக்கல் - மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை மேலூர், அலங்காநல்லூர், நத்தம் பகுதிகளில் FQL டிரேடிங் என்ற பெயரில் செயலி வாயிலாக கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என நடைபெற்ற ஆன்லைன் மோசடியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கில் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.

    மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பலரும் புகார் அளித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் தெரியாமல் பணத்தை முதலீடு செய்து இழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

    மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 13 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து மீது பரிவர்த்தனை செய்ய தடைவிதித்து பதிவுத் துறைக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி, தமிழக காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் FQL செயலி மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்ததாகக் கூறி, விரக்தியில் இளைஞர் ராசு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மதுரை - நத்தம் சாலையில் இளைஞரின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நத்தம் மதுரை சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

    English Summary

    A young man named Rasu from the Natham area has tragically taken his own life by hanging himself after falling victim to a scam involving the 'FQL' online app, which promised to double money. Enraged local residents have staged a road blockade on the Dindigul-Madurai highway.