சீமான் செயல்பாடுகளை பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்.. குறுக்கே அரசு வழக்கறிஞர் சொன்ன விஷயம்!

  • மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது என உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    ராமநாதபுரத்தை சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தொண்டி பகுதிக்கு உட்பட்ட மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஆற்றின் அகலம் குறைந்து நீர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றுப் படுகையில் பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் கழிவுநீர் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து, நிலத்தடி நீர் வளமும் பாதிக்கப்படுகிறது.

    Advertisement

    எனவே, வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை ஆவணங்கள் அடிப்படையில் கூட்டு சர்வே நடத்தி மணிமுத்தாறு நீர்நிலையின் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யவும், ஆற்றில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்றவும், ஆற்றுப் படுகையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளைக் அகற்றி, நீர்நிலை அதன் இயற்கையான நிலைக்குத் திரும்புவதைப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

    இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பகுதியில் சுத்தம் செய்வதற்கு தன்னார்வலர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    அப்போது நீர் நிலையை சுத்தம் செய்ய நாம் தமிழர் கட்சியினருக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ஒரு அரசியல் கட்சி தாமாக முன்வந்து இந்த பணியில் ஈடுபடுகிறது, இதனை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அரசு, பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இணைந்து செயல்பட்டால் தான் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும். ஒரு அரசியல் கட்சி இது போன்ற விஷயங்களில் முன்வருகிறது. அதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து மறுப்பு தெரிவிப்பது ஏற்கத்தக்கது அல்ல எனத் தெரிவித்தனர்.

    Advertisement
    சீமான் மீது ஆக்சன் எடுக்கலாமா? சென்னைக்கு திரும்பியதும்.. விஜய் கேட்ட கேள்வி.. பயங்கர பிளான்!

    மேலும் நீதிபதிகள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். எனவே நாம் தமிழர் கட்சியினரை மணிமுத்தாறு ஆற்றுப்பகுதியின் தூய்மைப்படுத்தும் பணியில் மட்டும் அரசு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    அப்போது அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்த விஷயத்தை வைத்து நாம் தமிழர் கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்றார். அதற்கு நீதிபதிகள், "இதில் என்ன அரசியல் ஆதாயம் இருக்கப் போகிறது? இது தொடக்கமாக இருக்கட்டும். பின்பு ஒவ்வொருவராக முன்வருவார்கள். நீர்நிலை தூய்மைப் பணியின் போது அரசியல் சம்பந்தமாக எதுவும் பேச வேண்டாம், தூய்மைப்படுத்துவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசலாம்" என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    English Summary

    High Court Madurai Bench Judges remarked that the activities of Seeman, the Chief Coordinator of the Naam Tamilar Katchi, are praiseworthy.