கணவன் எங்கு போனாலும் மனைவி நாய்க்குட்டி போல பின்னாடியே போகணுமா? மதுரை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன்

  • மதுரை: கணவன் வேலைக்காக வெளியூருக்கு போனால், மனைவியும் அவருடன் சென்றிருக்க வேண்டும். அப்படி கணவன் மனைவி ஒன்றாக வசித்திருந்தால் மட்டுமே தவறான உறவு போன்ற பிரச்சினைகள் ஏற்படாது என்று கீழ்கோர்ட்டு தெரிவித்த கருத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. “கணவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி போல மனைவியும் பின்தொடர முடியுமா?" என்ற ரீதியில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?

    Advertisement

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு 67 வயதாகிறது.. இவர், தன்னுடைய மனைவிக்கு இன்னொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கூறி விவாகரத்து கோரி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவரது விவாகரத்து கோரிக்கையை கீழ்கோர்ட்டு நிராகரித்து விட்டது.. அதனால், அந்த உத்தரவை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    Advertisement

    சிவகங்கை கணவருக்கு கொட்டு வைத்த மதுரை கோர்ட்

    இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் விசாரித்தனர். வழக்கை விசாரித்தபோது, கீழ்கோர்ட்டு தெரிவித்திருந்த காரணம் குறித்து நீதிபதிகள் தங்களது அதிருப்தியை பதிவு செய்தனர்.

    மனுதாரர் வேலை தேடி சிவங்கையை விட்டு வெளியேறி மும்பைக்கு சென்று பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், கீழ்கோர்ட்டின் பார்வையில், "அவர் தனது மனைவியையும் மும்பைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படி மனைவியையும் உடன் அழைத்து சென்று, அவரது பாலியல் தேவையையும் நிறைவேற்றியிருந்தால் இதுபோன்ற தவறான நடத்தை ஏற்பட்டிருக்காது" என்பதுதான் அந்த நீதிமன்றத்தின் கருத்தாக இருந்தது.

    Advertisement

    பின்னாடியே போறதுக்கு நாய்க்குட்டியா

    ஆனால் இப்படியான அணுகுமுறையை இந்த மதுரை ஐகோர்ட்டு ஏற்கவில்லை.. இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.. "கணவன் எங்கு சென்றாலும் மனைவியும் அவருடன் செல்ல வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.. இதுபோன்ற கருத்தை சில தீவிர பெண்ணியவாதிகள் பாராட்டக்கூடும் என்றாலும், எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    உதாரணமாக, கணவன் ராணுவத்தில் பணியாற்றுபவராக இருந்தால், அவர் பணிபுரியும் ராணுவ முகாமில் குடும்பத்துடன் சேர்ந்து வசிப்பது எப்போதும் சாத்தியமாக இருக்காது..

    ஒரு சிம் கார்டு விளம்பரத்தில் ஒருவர் செல்லும் இடமெல்லாம் நாய் ஒன்று தொடர்ந்து செல்வது போல காட்சி இடம்பெறும்.. அதுபோல கணவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மனைவியும் அவரை பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமற்றது" என்று நீதிபதிகள் காட்டமாக குறிப்பிட்டனர்.

    Advertisement

    மீண்டும் இணைய முடியாத பிரிவு

    தொடர்ந்து வழக்கு குறித்து நீதிபதிகள் சொல்லும்போது, "கணவனும் மனைவியும் கடந்த 16 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 2 பேரையும் நீதிபதிகள் நேரடியாக ஆலோசனை செய்து மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா என்றும் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த பெண் மீண்டும் கணவருடன் இணைந்து வாழ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை..

    அதனால் கணவன், மனைவிக்கு இடையிலான திருமண உறவு மீண்டும் சரிசெய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது. எனவே தம்பதி இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்தனர்.

    Advertisement

    விவாகரத்த தந்த நீதிபதிகள்

    இதையடுத்து கீழ்கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு, 67 வயது நபருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. அதேசமயம், அவரது மனைவிக்கு ரூ.7 லட்சம் தொகையை அவர் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கில், கணவன்-மனைவி தனித்தனியாக வசிப்பது மட்டும் திருமண உறவில் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம் என்று கருத முடியாது என்பதையும், கணவன் வேலைக்காக வேறு இடத்துக்குச் சென்றால் மனைவியும் கட்டாயம் அவருடன் செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல என்பதையும் மதுரை ஐகோர்ட்டின் கருத்து தெளிவுபடுத்துகிறது... இதுதான் சோஷியல் மீடியாவிலும் பலரது கவனத்தை பெற்று வருகிறது...!!

    English Summary

    The Madras High Court, while granting a divorce to a 67-year-old man, severely criticized the lower court for suggesting that a wife should automatically follow her husband for his employment. The judges questioned this patriarchal expectation, using a sharp analogy regarding commercial advertisements to emphasize that separation doesn't imply infidelity.