வெளிநாட்டில் இருந்து மதுரையில் வாழும் மனைவியை காப்பாற்றிய கணவன்.. திருடர்களுக்கு மறக்க முடியாத பரிசு

  • மதுரை: மதுரை மேலூரில் வீட்டிற்குள் திருடர்கள் வந்ததை வெளிநாட்டில் இருந்து பார்த்த கணவர் மிக சமார்த்தியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு மனைவியை காப்பாற்றி உள்ளார். அத்துடன் தன் வீட்டில் புகுந்த திருடர்களையும் சிக்க வைத்துள்ளார். ஆட்கள் திரண்டதால் சிக்கி கொண்ட திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். போனில் மனைவியின் குரலில் தெரிந்த மாற்றத்தை வைத்து கண்டுபிடித்து திருடர்களை சிக்க வைத்துள்ள கணவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    Advertisement

    எவ்வளவு வசதி இருந்தாலும், வசதியே இல்லை என்றாலும், சிசிடிவி கேமரா வைப்பது இன்றைய சூழலுக்கு நல்லது.. ஏனெனில் திருடர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டை நோட்டமிட்டு பணம் பறிக்க திட்டமிடலாம். பொதுவாக சிசிடிவி கேமராக்கள் இல்லாத வீடுகளில் திருடவே திருடர்கள் விரும்புவார்கள். எனவே ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி அமைப்பது இன்றைக்கு மிகவும் நல்லது. மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த சம்பவம் பலருக்கும் பாடமாக அமைந்துள்ளது. கணவர் தனது மனைவியின் குரலில் தெரிந்த மாற்றத்தை வைத்தே, வெளிநாட்டில் இருந்தபடியே காப்பாற்றியதுடன் துரிதமாக செயல்பட்டு தன் வீட்டில் புகுந்த திருடர்களையும் சிக்க வைத்திருக்கிறார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

    Advertisement

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டி அ.புதுப்பட்டியை சேர்ந்த இளங்கோவன் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இளங்கோவனின் மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இளங்கோவன், குவைத் நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், அ.புதுப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டில் கலைச்செல்வியும், அவரது குழந்தைகளும் வசித்து வருகிறார்கள்

    சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டார்கள். இதனால் கலைச்செல்வி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வெளிநாட்டில் பணிபுரியும் தனது கணவர் இளங்கோவனிடம் செல்போனில் கலைச்செல்வி பேசிக்கொண்டே வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு கலைச்செல்வி, கணவரின் செல்போன் அழைப்பை துண்டிக்காமல் கையில் போனை வைத்தபடியே சென்று கதவை திறந்தார்.

    Advertisement

    கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென 2 வாலிபர்கள் வீட்டுக்குள் புகுந்து கலைச்செல்வியை சேலையால் கழுத்தை இறுக்கி நகையை பறிக்க முயன்றுள்ளார். அப்போது செல்போனில் இணைப்பில் இருந்த இளங்கோவன், தன் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்துள்ளார்.

    இதனால் சுதாரித்த அவர் உடனடியாக ஊரில் உள்ளவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தனது வீட்டில் திருடர்கள் புகுந்து விட்டதாகவும், கலைச்செல்வி தனியாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு உடனடியாக இளங்கோவின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் உள்ளே இருந்த திருடர்களை வெளியே தப்ப விடாமல் கதவுகளை பூட்டினார்கள்.

    Advertisement

    ஆட்கள் திரண்டதால் திருடர்கள், கலைச்செல்வியை விட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர். இதற்கிடையே கீழவளவு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அந்த 2 இளைஞர்களையும் மடக்கிப்பிடித்தனர். திருடர்கள் தாக்கியதில் காயம் அடைந்த கலைச்செல்வியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அந்த இளைஞர்களை பிடித்து கீழவளவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட 2 பேரில் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பரசுராம் (வயது 23), மற்றொருவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ரஞ்சித் (25) என தெரியவந்தது. சம்பவத்தின் போது வீட்டின் வெளியே நின்று கொண்டு யாரும் வருகிறார்களா? என அதே பகுதியை சேர்ந்த தினேஷ் நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. கிராம மக்கள் வருவதை அறிந்த அவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராம், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர். தினேச்சை தேடி வருகிறார்கள்.

    English Summary

    A husband, while abroad, saw via surveillance that thieves had entered his home in Melur, Madurai; he acted with great presence of mind and speed to save his wife and also ensured the intruders were caught.