ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறதா? அப்படி சொல்லவே இல்லையே.. பல்டி அடித்த தவெக எம்எல்ஏ கருப்பையா!

  • மதுரை: ஜல்லிக்கட்டு குறித்து தாம் பேசியதை தவறாக திரித்து சொல்கிறார்கள் என்று தவெக எம்எல்ஏ கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். தமிழனின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இளைஞர்களை உற்சாகப்படுத்துவதாக கூறிய கருப்பையா, ஜல்லிக்கட்டு மங்காமல், மறையாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    சட்டசபையில் தவெக எம்எல்ஏ கருப்பையா ,'இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டு' என்று பேசியது சர்ச்சையாகியது. தவெக எம்எல்ஏ கருப்பையாவின் பேச்சை தவெகவினரே ரசிக்கவில்லை. கருப்பையாவின் பேச்சிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றன.

    Advertisement

    சட்டசபையில் தவெக எம்எல்ஏ கருப்பையா பேசுகையில், சோழவந்தான் தொகுதியில் அரசுக் கல்லூரி இல்லை. அரசு சார்பாக மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த வாடிப்பட்டி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டுள்ளது. ரூ.50 கோடி இருந்தால், அந்த சர்ச்சரை ஆலையை திறந்து இருக்கலாம்.

    இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய ஒரு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மைதானம் அமைக்க அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு பதிலாக அந்த பணத்தை, இந்த சர்க்கரை ஆலைக்கு கொடுத்திருந்தால், அதனை திறந்து இருக்கலாம் என்று தெரிவித்தார். அலங்காநல்லூர் பகுதி இவரின் சடட்சபை தொகுதிக்குள் தான் வருகிறது. இதனால் சொந்த தொகுதியிலேயே எதிர்ப்பு கிளம்பியது.

    Advertisement

    இந்த நிலையில் தவெக எம்எல்ஏ கருப்பையா 2 நாளில் பல்டி அடித்துள்ளார். இதுதொடர்பாக கருப்பையா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியம், வரலாறு, தொன்மைமிக்கது. எத்தனை ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஜல்லிக்கட்டு மங்காமல், மறையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன்.

    2008 முதல் 2011 வரை 4 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டிருந்தது. இதன்பின் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தான் 84 நிபந்தனைகளை பின்பற்றி நீதிமன்ற உத்தரவு பெற்று ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினேன். இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நல்ல அர்த்தத்தில் தான் அப்படி பேசினேன். அதில் எந்த உள்அர்த்தமும் கிடையாது.

    Advertisement

    ஜல்லிக்கட்டு நடக்கும் போது இளைஞர்கள் உற்சாகமாக இருப்பார்கள். ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கொடுத்த பணத்தை சர்க்கரை ஆலைக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றுதான் பேசினேன். கலைஞர் பெயர் வைப்பதற்காக ஏழு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைத்தேன்.

    இளைஞர்களை கூண்டுக்குள் அடைக்க கூடாது. ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரம்.. தமிழனின் உணர்வு.. இளைஞர்களை தவெக ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்.. அவர்களை சுதந்திரமாக விட வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை என்று தெரிவித்தார். மாற்றி மாற்றி பேசும் கருப்பையாவின் பேச்சு தவெகவினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.

    English Summary

    Jallikattu: TVK MLA Karuppiah Reaffirms Support for Jallikattu Amid Backlash over Misquoted Remarks in Assembly