கும்பகோணம் மகாமகம் நெரிசல், தருமபுரி தீ வைப்பு சம்பவத்தின்போது அரசு வேலை தரவில்லை.. மனுதாரர் வாதம்!

  • மதுரை: "கும்பகோணம் மகாமகம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் ஆகிய நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவில்லை" என்று ஐகோர்ட் கிளையில் மனுதாரர் தரப்பில் இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தினருக்கு தற்போது அரசு வேலை வழங்கக் கூடாது, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு முடியும் வரை அரசு பணி வழங்க கூடாது என உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி தீரன் திருமுருகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். மேலும், சீனி அகமது என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    Advertisement

    கரூரில் பாதிக்கப்பட்டவர்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிய வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்டால், அது டிஎன்பிஎஸ்சி, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அல்லது பிற சட்டப் பூர்வ பணியாளர் தேர்வு முறையை பின்பற்றாமல் அரசுப் பணியை விரும்புவோருக்கு வழங்குவதாக அமைந்து விடும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி போல கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது, இதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    அதற்கு பதிலளித்த மனுதாரர், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றால் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும் புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார். ஏற்கனவே கும்பகோணம் மகாமகம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம், ஆகிய நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவில்லை என்று தெரிவித்தார். மேலும், விசாரணை நிலுவையில் இருக்கும்போது அரசுப் பணி வழங்கக்கூடாது, இது சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

    Advertisement

    இதையடுத்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தற்காலிக நியமனமாக அரசு வேலை வழங்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கரூரில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு பணி வழங்கும் விவகாரத்தில் பணி நியமன விதிமுறைகளை அரசு மீறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை. இன்று நிகழ்வு நடைபெறலாம். ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த அரசு பணி என்பது தற்காலிகமானது தான் என்றும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தனர். மேலும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்கு விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Karur case: Arguments were presented today on behalf of the petitioner at the High Court Bench, stating that compensation has not been provided to the families of those who lost their lives in the Kumbakonam Mahamaham incident, the Sterlite shooting, and the Dharmapuri bus burning incident.