கரூர் நெரிசல்: அரசு வேலைக்கு தடை இல்லை.. தற்காலிக பணி நியமனம் செய்யலாம்- நீதிபதிகள் இடைக்கால உத்தரவு

  • மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற ஐகோர்ட் மதுரை கிளை, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூர் செல்லும் நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி சீனி அகமது ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    கரூர் கூட்ட நெரிசல்

    கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் 2025 செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்பட்டது. அதேசமயம், தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கினார்.

    அரசு வேலை?

    இதனிடையே, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில் இன்று (ஜூலை 10) முதலமைச்சர் விஜய் கரூர் சென்று, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க இருப்பதாக தகவல் வெளியானது.

    Advertisement

    இந்த தகவல் வெளியாகி, பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதுபோன்ற சூழலில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில நிர்வாகி சீனி அகமது மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    ஐகோர்ட் கிளையில் விசாரணை

    ஆனால், அந்த வழக்கை நேற்று அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது ஐகோர்ட் மதுரை கிளை. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது எனத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    நீதிபதிகள் கேள்வி

    அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி போல் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது, அரசின் முடிவில் என்ன தவறு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாக மனுதாரர்கள் வாதம் வைத்தனர்.

    மேலும், மகாமகம் கூட்ட நெரிசல், தருமபுரி தீ வைப்பு சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்றவற்றின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை தரவில்லை என மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

    தற்காலிக பணி நியமனம்

    கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தற்காலிக பணி நியமனம் என்பது நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

    Advertisement

    மேலும், டி.என்.பி.எஸ்.சியை தானாக முன்வந்து மனுதாரராக சேர்த்துள்ளது ஐகோர்ட் கிளை. மேலும், வரும் 21 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மற்றொரு வழக்கு

    இதேபோல, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்களின்போது உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கான விதிகள் எதுவும் இல்லை. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அந்த விசாரணையை நீர்த்துப்போகச் செய்துவிடும். சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாற வாய்ப்புள்ளது.

    Advertisement

    எனவே சிபிஐ விசாரணை நிறைவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கும் அரசு வேலை வழங்கக்கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Cases seeking to prevent the government from providing employment to the families of the 41 people who died in the Karur stampede are coming up for hearing today at the Madurai Bench of High Court.