AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.. கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி

  • மதுரை: கீழடி அகழாய்வு குறித்து தனது அறிக்கையைத் திருத்தச் சொன்ன தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணா பதிலடி கொடுத்துள்ளார். தான் நேர்மையாகவே அறிக்கையைத் தயாரித்துள்ளதாகவும் அதை மாற்ற முடியாது எனக் கூறியுள்ளார். மேலும், மத்திய அரசு இது தொடர்பாக அனுப்பிய கடிதம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது போல இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் 2,600 ஆண்டுகள் பழமையான சங்ககால நகர நாகரிகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய அகழாய்வு அறிக்கை விவகாரம், தற்போது இந்தியத் தொல்லியல் துறைக்கும் அதன் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கும் இடையே கிட்டத்தட்ட மோதலாக மாறியுள்ளது.

    Advertisement

    அகழாய்வு

    கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் கீழடியில் முதற்கட்ட அகழாய்வுகளைத் தலைமை தாங்கி நடத்தியவர் அமர்நாத் ராமகிருஷ்ணா. அங்குக் கண்டெடுக்கப்பட்ட 5,765 தொல்லியல் பொருட்களை உலகத் தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி, 982 பக்கங்கள் கொண்ட விரிவான ஆய்வறிக்கையைக் கடந்த 2023 ஜனவரியில் இந்தியத் தொல்லியல் துறையிடம் அவர் முறைப்படி சமர்ப்பித்தார்.

    அந்த அறிக்கையில், "கீழடி நாகரிகம் கிமு 800 முதல் கிமு 500-க்கு இடைப்பட்ட, அதாவது சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான நகரத் தமிழ் நாகரிகம்" என்பது அறிவியல் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் மத்திய அரசு அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் முடக்கி வைத்திருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

    Advertisement

    அமர்நாத் ராமகிருஷ்ணா

    இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்த கீழடி அறிக்கை 'தெளிவற்றது மற்றும் முழுமையற்றது' என்று கூறி, அதனைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு இந்தியத் தொல்லியல் துறையின் உள் மதிப்பீட்டுக் குழு கடந்த மார்ச் 27ம் தேதி அவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியது. 114 பக்கங்கள் கொண்ட ஒரு விமர்சனப் பட்டியலையும் மத்திய அரசு அதனுடன் இணைத்திருந்தது.

    மத்திய அரசின் இந்தக் கடிதத்திற்கு, தற்போது தொல்லியல் துறையின் நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் தேசிய பணிக்குழு இயக்குநராக உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணா மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "கீழடி அகழாய்வின் போது தொல்லியல் துறையின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, முழுமையான தொழில்முறை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மட்டுமே பணியாற்றினேன். அகழாய்வில் கிடைத்த அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் பாரபட்சமின்றி முடிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    ஏஐ ரிப்போர்ட்

    எனது ஆய்வறிக்கையை மேம்படுத்துமாறு மத்திய குழு கூறிய போதிலும், அதற்கான எந்தவொரு தெளிவான காரணங்களோ அல்லது நியாயங்களோ வழங்கப்படவில்லை. மத்திய அரசு எனக்கு அனுப்பியுள்ள 114 பக்க விமர்சன மதிப்பீடு, தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் ஏதோ மனிதர்கள் எழுதாமல், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட மென்பொருள் அறிக்கை போலத் தோன்றுகிறது. மதிப்பீட்டுக் குழுவின் இந்த விமர்சனங்கள் துல்லியமற்றதாக இருக்கிறது.

    அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், எனது மனசாட்சிப்படி நேர்மையாகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை முழுமையான நம்பகத்தன்மை கொண்டது. இதில் எள்ளளவும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமோ, மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையோ எனக்கு இல்லை!" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கீழடி

    கீழடி அகழாய்வு தொடங்கியது முதலே நிதிச் சிக்கல் தொடங்கிப் பல பிரச்சினைகள் வந்தது. அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாமுக்குத் தூக்கி அடித்தது எனப் பல்வேறு சிக்கல்கள் வந்தது. அகழாய்வு முடிந்த பிறகும் 982 பக்க அறிவியல் அறிக்கையைத் தெளிவற்றது என முடக்கச் சரியானது இல்லை என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

    English Summary

    Renowned archaeologist Amarnath Ramakrishna refused to alter his 982-page Keezhadi excavation report, criticising the Archaeological Survey of India(கீழடி விவகாரம் வெடிக்கும் புதிய குழப்பம்): Keezhadi Excavation Report latest news in tamil.