மதுரை: பழனி கோயில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பகுதியில் உள்ள பழனி கோவிலுக்குச் சொந்தமான தண்டாயுதபாணி மடம் நில மோசடி தொடர்பாக 11 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில், முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகிய மூவரும் திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். மூவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வர்தீன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். போலீஸ் காவல் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்த நிலையில், நான்கு பேரையும் திண்டுக்கல் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 66.