மதுரை: குழந்தைகளின் நலனைக் காரணம் காட்டி, முறிந்துபோன திருமண உறவைத் தொடருமாறு கணவன், மனைவி இருவரையும் நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. பெற்றோருக்கு இடையே தொடர்ந்து சண்டையும் கருத்து வேறுபாடுகளும் நிலவினால், அது குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளார்.
தேனி குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கணவர் தன் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, குடும்ப நல நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார். குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு திருமண உறவைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்பது கணவன் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், திருமண உறவின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று பரஸ்பர நம்பிக்கை. கணவன், மனைவி இருவருக்கும் இடையே அந்த நம்பிக்கை தொடர்ந்து இருக்கிறதா என்பதை ஆராய்வது நியாயமான அணுகுமுறை. திருமண உறவின் அடிப்படை அம்சங்களே பெருமளவில் சிதைந்துவிட்ட நிலையில், அந்த உறவை மீண்டும் சீரமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை நீதிமன்றம் மதிப்பிடலாம். ஆனால், குழந்தைகளுக்காக திருமண உறவைத் தொடர கட்டாயமில்லை. திருமண வழக்குகளில் குழந்தைகளின் நலன் முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், குழந்தைகளின் நலனுக்காக முறிந்துபோன திருமண உறவைத் தொடருமாறு தம்பதியினரைக் கட்டாயப்படுத்த முடியாது. குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள குடும்பச் சூழலையும் உள்வாங்கி வளர்வார்கள். பெற்றோருக்கு இடையே அன்பும் இணக்கமும் குறைந்து, அதற்குப் பதிலாகக் கசப்பும் தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகளும் நிலவினால், அந்த வீடு குழந்தைக்கு மகிழ்ச்சியான இல்லமாக இருக்காது . ஒரே வீட்டில் பெற்றோர் இருவரும் அந்நியர்களைப் போல வாழ்வதைக் காணும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான குடும்பச் சூழல் கிடைக்காமல் போகலாம். வீட்டில் தேவையான வசதிகள் இருந்தாலும், பெற்றோருக்கு இடையே அன்பும் இணக்கமும் இல்லாத சூழல் குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கக்கூடும். பெற்றோரின் தொடர்ச்சியான வாக்குவாதங்களைக் கேட்டு வளரும் குழந்தைகள் குழப்பத்துக்கும் பாதுகாப்பற்ற உணர்வுக்கும் ஆளாகலாம். தாங்கள் நேசிக்கும் தாய், தந்தை இருவருக்கும் இடையே சிக்கித் தவிக்கும் நிலையும் ஏற்படலாம். பெற்றோருக்கு இடையே இணக்கமான உறவு இல்லாதபோது, குழந்தைகளின் மன அமைதியும் பாதிக்கப்படலாம் எனக் கூறிய நீதிபதிகள், திருமண உறவைத் தொடர்வது மட்டுமே குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி அல்ல" எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.உயர்நீதிமன்ற மதுரை கிளை
திருமண உறவு
குழந்தைகள் நலன்
குழந்தைகளின் மனநிலை
கருத்து வேறுபாடு