திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமார் வந்த போது நடந்தது என்ன? ஜி.ஆர்.சுவாமிநாதன்

  • மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமார் சென்ற போது தாமதமாக நடை சாத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து அடுத்த வாரத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத் துறைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    கடந்த வாரம் தமிழக அமைச்சரவையில் பதவியேற்றதும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

    Advertisement

    அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி அமைச்சர் நிர்மல்குமாரும் திருப்பரங்குன்றம் சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் அன்றைய தினம் மதியம் 12.55 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்தார். கோயில் முன்பு தவெகவினர் திரண்டு அவரை வரவேற்றனர். கோயிலுக்கு சென்ற நிர்மல்குமாருக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.

    அமைச்சர், அவரது ஆதரவாளர்கள் என நிறைய பேர் மூலஸ்தானத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். கோயிலில் வழக்கமாக மதியம் 12.30 மணிக்கு உச்சி கால பூஜை தொடங்கும். இதையடுத்து 12.45 மணிக்கு கோயில் ராஜகோபுரத்தின் கீழ் உள்ள மண்டபத்தில் பெரிய கதவுகள் அடைக்கப்படும்.

    Advertisement

    பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா காலங்களில் மட்டும் மதியம் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களிலும் திருமண நாட்களிலும் வழக்கம் போல் மதியம் 12.45 மணிக்கு கோயிலுக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

    கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் தரிசனம் முடித்துக் கொண்டு வெளியேறிய பிறகு நடை சாத்தப்படும். அமைச்சர் நிர்மல் குமார் கடந்த 15 ஆம் தேதி 1 மணிக்கு கோயிலுக்குள் சென்றார். மதியம் 1.06 மணிக்கு மூலஸ்தானத்தில் ஆதரவாளர்களுடன் தரிசனம் முடித்து மதியம் 1.15 மணிக்கு வெளியே வந்தார். அதன் பிறகுதான் நடை சாத்தப்பட்டது.

    Advertisement

    வழக்கமாக பக்தர்கள் மூலஸ்தானத்தில் தரிசனம் முடித்து மடப்பள்ளி மண்டபம், சஷ்டி மண்டபம் வழியாக வெளியில் அனுப்பப்படுவர். அமைச்சருக்காக பெரிய நிலை கதவு திறக்கப்பட்டு முன்பக்க வாசல் வழியாக வெளியே அனுப்பப்பட்டார். இதன் வீடியோ வைரலான நிலையில் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஊருக்கு ஒரு நியாயம் அமைச்சருக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பியிருந்தனர்.

    இந்த நிலையில் கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறை குறித்த வழக்கு மதுரை கிளை நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது "அமைச்சர் நிர்மல்குமாருக்காக நடை தாமதமாக சாத்தப்பட்டதாக சொல்கிறார்கள். அமைச்சர் உள்ளிட்டோர் கருவறைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய வீடியோ வெளியாகியுள்ளது, எனவே 15ஆம் தேதி அமைச்சர் நிர்மல்குமார் திருப்பரங்குன்றம் சென்ற போது என்ன நடந்தது என்பது குறித்து அறநிலையத் துறை செயலாளர் அடுத்த வாரம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபத் தூணில் விளக்கேற்றும் விவகாரத்திற்கு பிறகு தற்போது சுவாமிநாதன் கோயில் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    English Summary

    The Madurai Bench of the Madras High Court has directed the HR&CE Department Secretary to submit a report next week regarding the controversy over the delayed temple closure during Minister Nirmal Kumar’s visit to the Tirupparankundram temple.