மதுரை கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் கோர விபத்து.. ஆம்னி பஸ் அரசு பஸ் மீது மோதியதில் 6 பேர் பலி!

  • மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் பலியாகிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 41 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது இன்று அதிகாலையில் கொட்டாம்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் மோதி விபத்துக்குள்ளானது.

    Advertisement

    தனியார் ஆம்னி பேருந்து மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் பகுதி நான்குவழிச் சாலையில் இன்று அதிகாலை சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர் திசையில் திரும்பி, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் மீண்டும் இடது புறம் திரும்பி, வஞ்சிநகரம் கிராம பயணிகள் நிழற்குடையின் மீதும் மோதியது. இதில் நிழற்குடை முழுவதும் சேதமானது. ஆம்னி பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் அரசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 4 ஆண்கள், 1 பெண் என 5 பேர் உயிரிழந்தனர். நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிறிய புஷ்பம் (56), திருச்சி எடமலைப்பட்டி ஆனந்த ராஜ் (46), திருச்சி காவல்துறை குடியிருப்பு காலனி சூர்யா (29), திருவாரூர் முகமது யாசின் (60), திசையன்விளை ஆபிரகாம் (40) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    Advertisement

    இந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 42 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

    English Summary

    A tragic accident occurred near Kottampatti, Madurai, where a head-on collision between a government bus and an omni bus resulted in five deaths on the spot. Forty-two people have been admitted to the hospital with severe injuries.