மதுரை மத்திய சிறையில் பயங்கரம்.. கைதி தாக்கியதில் சிறைக்காவலர் படுகாயம்! என்ன நடந்தது?

  • மதுரை: மதுரை மத்திய சிறையில் சிறை கைதி மூர்த்தி என்பவர், சிறைக்காவலரை வாளியால் கொடூரமாக தாக்கியள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குளிப்பதற்கு குடிநீரை பயன்படுத்த முயன்ற சிறைக்கைதி மூர்த்தி என்பவரை சிறைக்காவலர் தெய்வநாயகம் கண்டித்ததால், கோபம் அடைந்த கைதி, அவரை முகத்தில் பயங்கரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் சிறைக்காவலர் தெய்வநாயகம் படுகாயம் அடைந்த நிலையில், அவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Advertisement

    தமிழகத்தில் சமீப நாட்களாக சிறையில் கைதிகள் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடிய நிலையில், தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடி நாட்டையே அதிர வைத்தனர். சிறையில் அடுத்தடுத்து நடக்கும் இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் சிறையில் பாதுகாப்பு என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியது.

    Advertisement

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரை மத்திய சிறையில் சிறை கைதி மூர்த்தி என்பவர், சிறைக்காவலரை வாளியால் கொடூரமாக தாக்கியுள்ளார். மதுரை மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் நேற்று காலை குளிப்பதற்காக விசாரணை கைதிகள் உள்ள பகுதியில் கைதிகள் வந்துள்ளனர்.

    ஆயுதமான சாப்பாடு தட்டு.. கைதி எடுத்த விபரீத முடிவு.. நாகை சிறையில் ஷாக் சம்பவம்

    அங்கு பாதுகாப்புக்கு வெறும் 4 காவலர்களே இருந்ததாக கூறப்படுகிறது. கைதிகள் குளிப்பதற்காக போர் வாட்டர் உள்ளே இருக்கும் நிலையில் மூர்த்தி என்ற கைதி மட்டும், குடிநீரில் குளிக்க முயன்றுள்ளார். இதற்காக வாளியில் நல்ல தண்ணீரை பிடித்துள்ளார். இதை கவனித்த தலைமை காவலர் தெய்வநாயகம், கைதி மூர்த்தியை சத்தம் போட்டு வாளியை பறித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கைதி மூர்த்தி காவலரை தனது கையால் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.

    Advertisement

    இந்த தாக்குதலில் கண்ணில் பலத்த காயம் அடைந்த தலைமை காவலர் தெய்வநாயகம் நிலைகுலைந்துள்ளார். கைதி மூர்த்தி தாக்கும் போது சக கைதிகளும் வேடிக்கை பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இதர காவலர்கள், காவலர் தெய்வநாயகத்தை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவலரை தாக்கிய கைதி மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை கைதி தப்பித்து 3 நாளாச்சு.. ஏற்கனவே காவல் பாதுகாப்பில் தப்பித்தவரை கூட பாதுகாக்க முடியாதா

    இந்த சம்பவம் பற்றி சிறைக்காவலர்கள் கூறுகையில், "தேனியில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்திற்கு பிறகு சிறையில் காவலர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், விழிப்புடன் காவலர்கள் இருப்பதால் கைதிகள், காவலர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். கைதிகள் மிரட்டும் நிலையும் உள்ளது. காவலர்களை தாக்க தக்க நேரம் பார்த்து கொண்டு இருப்பது போல இருப்பதால், தேவையான நடவடிக்கைகளை சிறை நிர்வாகமும் தமிழக அரசும் எடுக்க வேண்டும்'' என்றனர்.

    Advertisement

    கடந்த 1999 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டது. அப்போது சிறை அதிகாரி எரித்துக்கொல்லப்பட்டார். இத்தகைய கொடூர சம்பவங்கள் போல எதுவும் மீண்டும் நடைபெறாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், சிறைத்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே சிறை காவலர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    Madurai Central jail: An incident at the Madurai Central Prison, in which an inmate named Moorthy brutally attacked a prison guard with a bucket, has caused a stir. When the guard, Deivanayagam, reprimanded the inmate for attempting to use drinking water for bathing, the enraged prisoner struck him violently in the face. The prison guard sustained severe injuries in the attack.