மதுரைக்கு புதிய மேயரா? ஒன்றாக சென்ற திமுக நிர்வாகிகள்.. கைவிரித்த ஸ்டாலின்.. பின்னணியில் சிபிஎம்?

  • மதுரை: மதுரை மாநகராட்சிக்கு திமுக சார்பாக புதிய மேயரை தேர்வு செய்ய வேண்டும் என்று 3 மாவட்டச் செயலாளர்கள் எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலின் போது சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளும் திமுக கூட்டணி பக்கம் வரும் என்பதால், புதிய மேயரை நியமிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக வந்திருப்பதாக பேசப்படுகிறது.

    Advertisement

    மதுரை மாநகராட்சியில் ரூ.100 கோடி மதிப்பில் சொத்து வரி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மொத்தமாக 26 பேர் கைது செய்யப்பட்டு, அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    Advertisement

    இந்த வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதன்பின் கணவர் பொன் வசந்த் ஜாமினில் வெளியில் வந்த பின், மேயர் பதவியில் இருந்து இந்திராணி ராஜினாமா செய்தார். இதனால் மதுரை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேயர் பதவியை பிடிக்க திமுகவின் முன்னணி கவுன்சிலர்கள் தீவிரமாக இருந்தனர்.

    ஆனால் அப்போது அமைச்சர்களாக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி இடையில் கோஷ்டி பூசல் அதிகரித்தது. இதனால் திமுக தலைமை இப்போதைக்கு மேயராக யாரையும் நியமிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தது. தற்போது சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. மதுரையில் திமுக வெறும் 1 தொகுதியில் மட்டுமே வென்றது.

    Advertisement

    அமைச்சர்களாக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோரும் தோல்வி அடைந்தனர். தற்போது திமுக கவுன்சிலர்கள் மீண்டும் மேயர் விவகாரத்தை தலைமைக்கு கொண்டு செல்ல விரும்பினர். மொத்தமாக திமுகவுக்கு 67 கவுன்சிலர்கள் இருக்கின்றனர். இதனால் மாவட்டச் செயலாளர்களான மூர்த்தி, மணிமாறன் மற்றும் தளபதி ஆகியோர் ஒன்றாக இணைந்து கட்சித் தலைமையிடம் பேசி இருக்கின்றனர்.

    ஆனால் திமுக தலைமையோ பொறுப்பு மேயராக இருக்கும் சிபிஎம் நாகராஜன் தொடரட்டும் என்று கூறி இருக்கிறது. அப்போது மதுரையில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வந்துள்ளோம்.. எந்த கோஷ்டி பூசலும் கிடையாது. எந்த கவுன்சிலரை மேயராக நியமித்தாலும் ஏற்க தயார் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் இதனை காதிலேயே வாங்கவில்லை என்று தெரிகிறது.

    Advertisement

    நேரடியாக தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் விரைவில் நமது கூட்டணிக்கு வந்துவிடுவார்கள். அதனால் மேயர் விவகாரத்தை இனி கொண்டு வராதீர்கள் என்று கூறி இருக்கிறார். இதனால் மதுரை நிர்வாகிகள் கப்சிப் மோடில் மதுரைக்கு திரும்பி இருக்கிறார்கள். இதனால் மதுரை கவுன்சிலர்கள் கடுமையான அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.

    English Summary

    Madurai Corporation: Madurai Mayor Replacement Stalls as DMK Awaits CPM-CPI Coalition Strategy