மதுரை: தீபாவளி பண்டிகை நாளில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலூர் அருகே அழகர்கோவில் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆறுமுகம் மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நவீன் என்பவரும் உயிரிழந்தார். இவர்கள் இறைச்சி வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த லோகேஷ், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் என்பதும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றொருவரான நவீன், வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நாளில் ஒரே விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.