கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு?

  • மதுரை: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் முன்வைத்த வளர்ச்சித் திட்டங்களில் மதுரைக்கும் தென் மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது தென் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள் குறித்து வலுவாக பேசவில்லை என்கின்றனர் தென்மாவட்டவாசிகள்.

    Advertisement

    சமீபத்தில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்தார். கல்வி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன.

    Advertisement

    குறிப்பாக கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் பாதை அமைப்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    ஆனால் தென் தமிழகத்தின் முக்கிய வளர்ச்சி மையமாக கருதப்படும் மதுரைக்கான திட்டங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

    நிதி ஆயோக்

    இதனால் மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடர்பாக எந்தவித சிறப்பு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் முன்னேறி வந்தாலும், திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய அரசின் கூடுதல் நிதி மற்றும் நிர்வாக ஆதரவு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    மதுரை எய்ம்ஸ்

    இந்த நிலையில், ஏற்கனவே தொடங்கப்பட்டு பாதி வழியில் இருக்கும் மதுரை எய்ம்ஸ் திட்டத்தை முடிக்க வலியுறுத்தாமல், புதிய எய்ம்ஸ் திட்டங்களை மட்டும் முன்னிறுத்தியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதேபோல் மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டமும் முக்கிய கோரிக்கைகளில் இடம்பெறாதது கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், பெரிய சர்வதேச விமானங்கள் தரையிறங்குவதற்கான ஓடுதள விரிவாக்கப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. இதற்கான நில எடுப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

    முதல்வர் விஜய்

    தென் தமிழகத்தின் சர்வதேச நுழைவாயிலாக மாறும் திறன் கொண்ட இந்த திட்டம் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் வலுவான கோரிக்கை முன்வைக்கப்படாதது வருத்தமளிப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
    மதுரைக்கான மற்றொரு முக்கிய எதிர்பார்ப்பு மெட்ரோ ரயில் திட்டமாகும். நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டம் தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. விரிவான திட்ட அறிக்கை தயாராக இருந்தும், திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலை தொடர்கிறது.

    மதுரை மெட்ரோ

    சென்னைக்கு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் வலியுறுத்தப்பட்ட நிலையில், மதுரையின் மெட்ரோ திட்டம் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடம், வைகை நதி சீரமைப்பு, புதிய தொழிற்பூங்காக்கள் அமைத்தல், தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் தொழில் முதலீடுகள் போன்ற முக்கிய அம்சங்களும் இந்தக் கோரிக்கை பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தென் தமிழகம்

    மேலும், தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்கள் முன்னுரிமை பெற வேண்டிய அவசியம் உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் வளர்ச்சி தமிழகத்தின் சமச்சீர் வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையவை, ஆனால், தற்போது சென்னை மற்றும் கொங்கு மண்டலங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக ஒரு கருத்து தென் மாவட்டங்களில் நிலவி வரும் நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் மதுரைக்கான முக்கிய திட்டங்கள் இடம்பெறாதது அந்த உணர்வை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

    English Summary

    Criticism grows in southern Tamil Nadu over the absence of key Madurai development projects in NITI Aayog discussions.