மதுரை: மதுரையில் தங்கும் விடுதி தொழிலதிபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடியோ ஆதாரங்களுடன் மிரட்டப்பட்ட 22 வயது இளம்பெண், காவல்துறையும் சிங்கப்பெண் படையும் தமக்கு உதவவில்லை எனக் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே கும்மிடிப்பூண்டி சிறுமி சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் கொந்தளித்து வரும் நிலையில், இந்த மதுரை விவகாரமும் பெண்களின் பாதுகாப்பற்ற சூழலை அம்பலப்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி ஓய்வதற்குள், அடுத்தடுத்து அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளன.
இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆளுங்கட்சிக்கு எதிராகக் கொந்தளித்து, பெண்களின் பாதுகாப்பு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். முக்கியமாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தமிழக அரசால் பெரும் விளம்பரங்களுடன் தொடங்கப்பட்ட "சிங்கப்பெண் படை" திட்டம் நடைமுறைக்கு வந்த வெறும் 6 நாட்களில், 11 சிறுமிகளுக்கு கொடுமைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில், "சிங்கப்பெண் படை"யின் அலட்சியத்தையும், காவல்துறையின் ஒருதலைப்பட்சமான போக்கையும் அம்பலப்படுத்தும் வகையில் மதுரையில் நடந்துள்ள இந்த சம்பவம் தற்போதைய பரபரப்பைக் கூட்டியுள்ளது. மதுரை மாநகரை சேர்ந்தவர் அந்த 22 வயது இளம்பெண்... இவர் கடந்த 2023ம் ஆண்டு மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அலுவலக வரவேற்பாளராக பணியாற்றத் தொடங்கினார். பெற்றோர் இல்லாத அந்தப் பெண், தனது உறவினர்களின் ஆதரவோடு தங்கி இந்த வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், அந்த லாட்ஜின் உரிமையாளரான தொழிலதிபர், ஆதரவற்ற அந்த இளம்பெண்ணைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, அடிக்கடி தவறான நோக்கத்துடன் நெருங்கிப் பழக முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணோ, தொழிலதிபரின் இந்த நடவடிக்கைகளைக் கடுமையாக கண்டித்து ஒதுங்கி சென்றுள்ளதாக தெரிகிறது. இதனிடையே கடந்த 2024ம் ஆண்டு ஒரு நாள் இரவு, விடுதியில் வசூலான பணத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு அந்தப் பெண்ணுக்குத் தொழிலதிபர் உத்தரவிட்டுள்ளார். "என் குடும்பத்தினர் எல்லாருமே வீட்டில்தான் இருக்கிறார்கள், அதனால் பயமின்றி வரலாம்" என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். ஓனரின் பேச்சை நம்பி அந்தப் பெண்ணும், அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.. ஆனால், அங்கு அந்தத் தொழிலதிபர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் குடிக்க கொடுத்த தண்ணீரை குடித்ததுமே, சில நிமிடங்களிலேயே அந்த இளம்பெண் மயக்கமடைந்துள்ளார். அந்த மயக்க நிலையைப் பயன்படுத்திக் கொண்ட கும்பல், அவரை ஆடையில்லாத கோலத்தில் போட்டோ, மற்றும் வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்ததும் அந்தப் பெண்ணிடம் ஆபாச படங்களைக் காட்டி, சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாக தொழிலதிபர் மிரட்டியுள்ளார். அடியாட்களை வைத்தும் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளார். தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, திருமணம் செய்து கொள்வதாகவும் சொல்லி, தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் உயிருக்கு அஞ்சிய அந்தப் பெண், வேலைக்கே செல்வதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் விடாத அந்த தொழிலதிபர், கடந்த ஏப்ரல் 30ம் தேதி மதுரை பைபாஸ் சாலையில் நடந்து சென்ற அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று, 4 நாட்களாகத் தனது வீட்டிற்குள் சட்டவிரோதமாக அடைத்து வைத்துப் பாலியல் சித்திரவதை செய்துள்ளார். இதிலிருந்து தப்பிக்க அந்தப் பெண் காவல்துறை உதவி எண் 100க்குத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முறையாக விசாரிக்காமல் அப்பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்களாம். இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்த அந்தப் பெண், மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் கடந்த மே 16 அன்று போலீசார் வழக்குப்பதிவு செய்தபோதிலும், தொழிலதிபருக்கு எதிராக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.. இதனால், தனக்கும் தனது உறவினர்களுக்கும் பாதுகாப்பு கோரியும், அந்த ஆபாச வீடியோக்களை அழிக்கக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்தப் பெண் நேற்று கண்ணீர் மல்கப் புகார் மனு அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண், "புகார் அளித்தபோது போலீசார் தொழிலதிபருக்கு ஆதரவாகப் பேசி, பணத்தைப் பெற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெறச் சொன்னார்கள். பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படை மற்றும் காவல்துறையின் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொண்டபோது எந்தவித ரெஸ்பான்ஸ்சும் இல்லை. அவர்கள் என்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது" என்று கண்ணீருடன் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கும்மிடிப்பூண்டி சிறுமி விவகாரம்
"சிங்கப்பெண் படை"யின் அலட்சியம்
மதுரை லாட்ஜில் சிக்கிய பெண்
வசூல் பணத்துடன் வர சொன்ன ஓனர்தொழிலதிபரின் பாலியல் சித்ரவதை கொடுமை
மதுரை கலெக்டரிடம் மனு