மதுரை குலுங்க குலுங்க.. மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா! பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு!

  • மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா, 17 ஆண்டுகளுக்கு பின் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    Advertisement

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடைபெற்று வந்தன. தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது.

    Advertisement

    மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டன. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தி வந்தனர்.

    கடந்த 11 ஆம் தேதியன்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கிய நிலையில், மற்ற கால பூஜைகளும் நடந்து வந்தன. நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்துச் செல்ல யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    Advertisement

    காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட் சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர். தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

    விழாவின் சிகர நிகழ்வாகக மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடைபெறுகிறது. இதனால் மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டு காணும் இட மெல்லாம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.

    Advertisement

    யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தர்களின் கோஷங்கள் விண்ணதிர முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. குவிந்திருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. பின்னர் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். இன்று காலை 10 மணி முதல் இரவு வரை நடைசாத்தப்படாமல் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    Advertisement

    மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பும் செய்யப்பட்டு உள்ளன. கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள், சுற்றுப்பகுதிகள் அனைத்தும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    English Summary

    The consecration ceremony of the world-renowned Madurai Meenakshi Amman Temple is taking place today with great grandeur, after a gap of 17 years.