மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. நாளை நீங்கள் பொது தரிசனம் செய்வது எப்படி?

  • மதுரை: மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேக பெருவிழா நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக நடப்பதால் மொத்த மதுரை மாநகரமே விழா கோலம் பூண்டுள்ளது. பல லட்சம் பக்தர்கள் மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். நாளை கும்பாபிஷேக பெருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கான பொது தரிசனம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. நாளை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அறிய வேண்டியவற்றை பார்ப்போம்.

    Advertisement

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும். ஆனால், தீ விபத்தில் கோவிலின் வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்ததால், அதன் சீரமைப்பு பணிக்காக கும்பாபிஷேக விழா தாமதமாகி வந்தது. அண்மையில் தான் வீரவசந்தராயர் மண்டப பணிகள் நிறைவு பெற்றது. அந்த மண்டம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி திறக்கப்பட்டது.

    Advertisement

    திருப்பணிகள்

    இது ஒருபுறம் எனில், ராஜகோபுரம் உள்பட கோவிலின் அனைத்து இடங்களிலும் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடந்து நிறைவு பெற்று வந்தது. ஒரு வழியாக பணிகள் எல்லாம் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கு கோவில் தயாரானது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற இருக்கிறது. இதையொட்டி மதுரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வரப்போகிறார்கள். மதுரை மக்களுமே இந்த கும்பாபிஷேத்தில் பங்கேற்க உள்ளார்கள். இதன் காரணமாக மதுரை மாநகரம் முழுவதுமே கடந்த ஒரு மாதமாக சீரமைக்கப்பட்டு வந்தது. தூய்மை பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள வீதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்தது. மின் விளக்குகள் அமைப்பது, தூய்மைப் பணிகள், தற்காலிகக் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள், சாலைப் பராமரிப்பு, தெருவிளக்குகள் மற்றும் சுகாதாரப் பணி வரை பல பணிகள் நடந்துள்ளது.

    Advertisement

    பூஜைகள் நடக்கிறது

    அதேநேரம் விழாவிற்கான ஏற்பாடுகள் மறுபக்கம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதற்காக பல லட்ச ரூபாய் மதிப்பில் வடக்கு ஆடி வீதியில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. முதல் கால யாக பூஜை கடந்த 11-ந் தேதி மாலையில் தொடங்கியது. நேற்று காலையில் 8-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று மாலையே 9-ம் கால யாக பூஜையும் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் இந்த பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று கும்பாபிஷேகம்

    விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக 414 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் இன்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு 10-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. பல்வேறு வேள்வி பூஜைகளுக்கு பின்னர், காலை 5 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கான யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள கும்ப கலசங்களுக்கு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது.

    Advertisement

    பின்னர் டங்கா மாடு, யானை, மேளதாள முழங்க அந்த யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி பரிவார சுவாமி சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு அந்த புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. குறிப்பாக தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடந்தது இன்று மாலையில் 11-ம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், ராஜகோபுரங்கள், சன்னதி கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு இந்த பூஜைகள் நடக்கிறது

    Advertisement

    நாளை கும்பாபிஷேகம் எப்படி நடக்கும்

    கும்பாபிஷேக நாளான நாளை அதிகாலையில் 4 மணி அளவில் 12-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. காலை 5.45 மணி அளவில் கலங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங்கள், தங்க விமானங்களுக்கும், 7.55 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பும் செய்யப்பட்டிருக்கிறது.

    பொது தரிசனம் எப்படி

    எனினும் இந்த முக்கிய நிகழ்வை திருக்கோயிலின் மேல்தளத்தில் இருந்து நேரில் காண பாஸ் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ் இல்லாத பக்தர்கள் மேல்தளத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேநேரம் கும்பாபிஷேகம்
    நிறைவடைந்த பின்னர், காலை 10 மணி முதல் பொது தரிசனம் நடைபெற உள்ளது. பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் வழியாக கோயிலுக்குள் நுழையவும், கிழக்கு கோபுரம் வழியாக வெளியேறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


    அவசர உதவி எண்கள் அறிவிப்பு

    கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள், தகவல் மற்றும் அவசர உதவிகளுக்காக 1800-425-6781, 1800-425-6782 ஆகிய கட்டணமில்லா உதவி எண்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் இந்த உதவி எண்களைத் தொடர்புகொண்டு தேவையான தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    எல்.இ.டி. திரைகள்

    கும்பாபிஷேக நிகழ்வை அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் காணும் வகையில், மதுரை நகரில் பேருந்து நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் திருக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட மொத்தம் 51 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கோயிலுக்குள் நேரடியாக செல்ல முடியாத பொதுமக்களும் கும்பாபிஷேக நிகழ்வை எளிமையாக காண முடியும். கோயில் கும்பாபிஷேக நிகழ்வையொட்டி காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரயில்களும் மதுரைக்கு விடப்பட்டுள்ளது.

    English Summary

    Madurai meenakshi amman temple kumbabishekam : The Madurai district administration has announced that general darshan for devotees participating in tomorrow's grand consecration ceremony will begin at 10:00 AM on Thursday. Let us look at what devotees visiting the Meenakshi Amman Temple tomorrow need to know.