மீனாட்சி தரிசனத்திற்கு ரெடியா.. போடி, திருநெல்வேலி, பழனியில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள்

  • மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை, ராமேசுவரம், பழனி, போடியில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் எல்லாமே மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, என சுற்றியுள்ள மக்கள் விழாவில் பங்கேற்கவேண்டும் என்ற நோக்கத்தில் விடப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்துமே முன்பதிவில்லா ரயில்கள் என்பது முக்கியமான விஷயம் ஆகும்.

    Advertisement

    தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி,

    Advertisement

    திருநெல்வேலியில் இருந்து ஒரு சிறப்பு ரயில் (வ.எண்.06001) இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்ட நிலையில், மாலை 5.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 6.30 மணிக்கு கூடல்நகர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.06002) நாளை மதியம் 12.15 மணிக்கு கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 5.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    இந்த திருநெல்வேலி சிறப்பு ரயிலை பொறுத்தவரை இரு மார்க்கங்களிலும், சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடயம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல், விருதுநகர், கல்லிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் 17 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    Advertisement

    ராமேசுவரம்-பழனி ரயில்

    இதேபோல் மற்றொரு சிறப்பு ரயில் (வ.எண்.06780) ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து இன்று மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு சரியாக இரவு 10.30 மணிக்கு பழனி ரயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.06779) பழனியில் இருந்து நாளை மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர் மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது.

    இந்த ரயில் இரு மார்க்கங்களிலும் சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் ராமேசுவரம்-திருப்பதி ரெயிலுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தேனி மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்

    அதேபோல, ஒரு சிறப்பு ரயில் (வ.எண்.06004) தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து நாளை பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மதியம் 1.30 மணிக்கு கூடல்நகர் ரயில் நிலையம் செல்கிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06003) நாளை கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 4.30 மணிக்கு போடி சென்றடைகிறது.

    ரயில் இரு மார்க்கங்களிலும் மதுரை, வடபழஞ்சி (நாகமலைப்புதுக்கோட்டை), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட மக்கள் எல்லாருமே மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ரயிலில் எளிதாக வந்து செல்லும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் விட்டிருக்கிறது.

    English Summary

    Madurai meenakshi amman temple kumbabishekam Special trains : In anticipation of the Kumbabishekam (consecration ceremony) at the Madurai Meenakshi Amman Temple tomorrow, unreserved special trains are being operated from Nellai, Rameswaram, Palani, and Bodi to manage passenger congestion.