மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின் தடை.. எடப்பாடி பழனிசாமி அப்செட்.. மின்வாரியம் தந்த விளக்கம் என்ன

  • மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தபோது திடீரென மின் தடை ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது... சுமார் 10 நிமிடங்கள் மின்சாரம் இல்லை என கூறப்பட்ட நிலையில், மின்வாரியமோ எந்தவித மின்தடையும் ஏற்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. அப்படி என்ன நடந்தது? மின்வாரியம் சொல்வது என்ன?

    Advertisement

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை 6 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றார்.

    Advertisement

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

    அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் சென்றிருந்தனர். பழனிசாமி கோயிலுக்குள் சென்ற சில நிமிடங்களிலேயே மின் தடை ஏற்பட்டது. சுவாமி சன்னதியிலிருந்து வெளியே வரும் வரை மின்சாரம் இல்லாததால் தரிசனம் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டது. மேலும், கோயிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியும் பாதிக்கப்பட்டது. இதனால் கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக ஜெனரேட்டரை இயக்கினர்.

    எடப்பாடி பழனிசாமி அதிருப்தி

    தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, மின் தடையை சுட்டிக்காட்டி தவெக ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதையெல்லாம் மீனாட்சி அம்மன் பார்த்தால் சரி. இந்த ஆட்சியில் நிம்மதியாய் வாழ முடியாது, நிச்சயமாய் பக்தர்கள் வாழ முடியாது. மக்கள் நிம்மதியாக இறைவனை பிரார்த்தனைக்கூட செய்ய முடியாது" என்றார்.

    Advertisement

    மின்வாரியம் விளக்கம்

    இந்த சம்பவம் குறித்து மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: "மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலில் 350 கே வி ஏ (KVA) மின் பளு கொண்ட உயர் அழுத்த மின் இணைப்பு (HT SC) உள்ளது. மேலும் அவசர காலங்களுக்காக இரண்டு 125 கே வி ஏ (KVA) திறன் கொண்ட மின்சார ஜெனரேட்டர்கள் உள்ளன. நாளை(இன்று) மிக முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு மதுரை மின்சார ஆய்வாளர் கோவில் வளாகத்தை ஆய்வு செய்து, கோவில் மின்சாரப் பிரிவு மூலம் சில பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    Advertisement

    அதன்படி, கோவில் மின்சாரப் பிரிவு, மாலை 4.20 மணிக்கு மின் வழங்கலை ஜெனரேட்டர் மின் இணைப்பிற்கு மாற்றியது. பணிகள் நிறைவடைந்த பின், மாலை 5.35 மணிக்கு மின் மின்வாரிய தொகுப்பிற்கு இணைப்பு மாற்றப்பட்டது. இதற்கு 1.5 நிமிடங்கள் மட்டுமே ஆனது. அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் மின்வாரிய தொகுப்பில் எந்தவித மின்தடையும் ஏற்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Madurai Meenakshi Amman Temple Power Cut.. Edappadi Palaniswami Upset, What Did Electricity Board Explain?