மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சேவை செய்வதற்கான 60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை சொத்து பத்திரப்பதிவு விவகாரத்தில் 3 பெண்கள் உட்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சொத்து பத்திரப்பதிவு விவகாரத்தில் துணை ஆட்சியர், முன்னாள் சார்பதிவாளர், முன்னாள் விஏஓ மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவைசெய்வதற்காக கடந்த1930 ஆம் ஆண்டு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் கடந்த 2021 ஆம் தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய்யப்பட்டது தொடர்பாக மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் கீழ் 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, சப் கலெக்டர் அன்பழகன், திண்டுக்கல்லை சேர்ந்த காளிக்குமார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன், முன்னாள் சார்பதிவாளர், அனந்தராமன் ஆகிய 6 பேரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள புதுக்கோட்டையை சேர்ந்த முத்துராணி(60), ராஜேந்திரன்(59),ஜோதி(50),கீதா(49) ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சேவை செய்வதற்கான 60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை சொத்து பத்திரப்பதிவு விவகாரத்தில் துணை ஆட்சியர், முன்னாள் சார்பதிவாளர், முன்னாள் விஏஓ மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.