மதுரை: மதுரை சோழவந்தான் அருகே நள்ளிரவில் பெட்ரோல் போட்ட சிலர், பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஊழியரை மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் குடித்துவிட்டு சட்டவிரோத செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க போலீசாரும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், அதை தாண்டி சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு நேரம் என்பதால் பெட்ரோல் பங்கில் அவர் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. அப்பகுதியிலும் ஆள்நடமாட்டம் பெரிதாக இல்லை. அப்போது இருசக்கர வாகனத்தில் 3 பேர் அங்கு வந்துள்ளனர். பெட்ரோல் நிரப்புவது போல் அவர்கள் வந்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் பெட்ரோல் போட சொன்னபோது, பங்க் ஊழியர் எதுவும் பேசாமல் பெட்ரோலை நிரப்பியுள்ளார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த நபரின் கத்தி கீழே விழுந்துள்ளது. அந்த கத்தியை எடுக்க பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் இறங்கியுள்ளனர். பிறகு கீழே இருந்த கத்தியை எடுத்து அந்த பங்க் ஊழியரை மிரட்ட தொடங்கினர். பங்க் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய அவர்கள், வெட்டிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன பங்க் ஊழியர் என்ன செய்து என்று புரியாமல் விழித்துள்ளார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த மொத்த பணத்தையும் அந்த மர்ம நபர்கள் பிடுங்கி சென்றனர். அப்போது பங்க் ஊழியருக்காக அங்கிருந்த ஒரு இளைஞர் வரவே.. அவரையும் கத்தியை காட்டி மிரட்டி விரட்டியுள்ளனர். பணத்தை பறித்துக்கொண்ட 3 பேரும் பின்னர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவை அனைத்துமே பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பங்க் உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இரவு நேரங்களில் பெட்ரோல் பங்குகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகும் நிலையில், அதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.