மதுரை: மதுரை சமயநல்லூரில் பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' என்ற சூர்யா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த சூர்யாவை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். முன் விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்டி சாக்கு என்கிற ரவுடி சூர்யா மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு, பழைய ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் அவர் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரவுடி சூர்யா உடலைக் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.