மதுரை: கட்டுமான இடத்தில் ஏற்பட்ட மண் சரிவால் 2 பெண் தொழிலாளர்கள் மரணம்!

  • மதுரை மாவட்டம் சிலைமான் அருகே திருமண மண்டபம் கட்டும் பணியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி இரண்டு பெண் கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கட்டுமான தொழிலாளர்கள் மதிய உணவுக்குப் பிறகு பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், ஆழமான குழியின் விளிம்பில் நடந்து செல்லும்போது, மண் தளர்ந்து சரிந்து விழுந்ததால் குழிக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மண்ணுக்குள் 2 பெண் தொழிலாளர்களும் புதைந்தனர். இந்த விபத்தில் சிக்கிய இருவரும் உயிரிழந்தனர்.

    Advertisement

    மணலூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி அவருக்கு 46 வயது, மற்றொருவர் புளியங்குளத்தைச் சேர்ந்த தமிழரசி அவருக்கு 60 வயது ஆகிறது. மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆழமான குழியில் இரும்பு கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

    தகவல் அறிந்ததும் சிலைமான் போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். முதலில் தனலட்சுமியின் உடலை மீட்டனர். பின்னர் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் கயிறுகள் மற்றும் தேவையான கருவிகளைப் பயன்படுத்தி பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தமிழரசியின் உடலையும் மீட்டெடுத்தனர்.

    Advertisement

    உயிரிழந்த இரண்டு பெண்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் தங்கராஜு மீது சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கட்டுமானப் பணியில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா, தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்ளையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Two women construction workers lost their lives in a tragic mudslide at a marriage hall construction site near Silaiman in Madurai district, with Thanalakshmi (46) and Tamilarasi (60) buried alive after the soil collapsed during work. மதுரை சிலைமான் அருகே திருமண மண்டப கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.