பூட்ஸ் காலால் தலையில் உதைத்த போலீஸ்? மதுரையில் விசாரணைக்கு சென்ற சிவனடியார் மரணம்! திக்திக் சம்பவம்

  • மதுரை: பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 55 வயது சிவனடியார் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். 55 வயதான இவர் சிவனடியாராக இருந்தாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 17ம் தேதி, வீட்டின் அருகே வாகனம் நிறுத்துவது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் தம்பதியுடன் பரமசிவத்துக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது

    இது கைகலப்பு வரை போனதாக தெரிகிறது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து சிந்தாமணி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.. இதையடுத்து பரமசிவன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பியுள்ளார். இந்தச் சூழலில் தான் கடந்த ஜூலை 19ம் தேதி பரமசிவத்தையும் அவரது மனைவி அய்யம்மாளையும் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

    போலீஸ் தாக்குதல்

    விசாரணை என்ற பெயரில் பரமசிவத்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அங்கு வைத்து அவரை தாக்கியதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். குறிப்பாக பூட்ஸ் காலால் தலையில் தாக்கியதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீஸ் தாக்கியதில் அவர் போலீஸ் ஸ்டேஷனிலேயே வாந்தி எடுத்து மயங்கியதாகவும், அதன் பிறகே அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். போலீசார் தாக்கியது குறித்து வெளியில் யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டியதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

    Advertisement

    இருப்பினும், போலீஸ் தாக்கியதால் காயமடைந்த பரமசிவத்துக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 8ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் ரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பரமசிவனம் ஆகஸ்ட் 11ம் தேதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    குற்றச்சாட்டு

    தனது கணவர் மரணத்திற்கு போலீசார் தாக்கியதே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அய்யம்மாள், இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே சிகிச்சையில் இருந்தபோது பரமசிவம் பேசியதாக கூறப்படும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் போலீசார் தன்னை தாக்கியதாகவும், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் போலீசார் தான் காரணம் என்று கூறியதாக அவரது குடும்பத்தினர் கூறினர்.

    Advertisement

    இருப்பினும், இந்த புகார்களை போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததாகவும் அவர் உயிரிழக்க அதுவே காரணம் என்றும் போலீசார் கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.

    English Summary

    A 55-year-old Sivite, Paramasivam, died after being taken to a police station for questioning over a parking dispute in Madurai(போலீஸ் விசாரணையில் சிவனடியார் மரணம்): Madurai Sivite Dies after police investigation.