மதுரை டூ தேனி.. அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்களுக்கு கடிவாளம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • மதுரை: இன்றைக்கு பல்வேறு வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வது தொடர்கதையாக உள்ளது. கோவை முதல் பொள்ளாச்சி வரை, சேலம் டூ ஆத்தூர், மதுரை டூ தேனி, நெல்லை டூ நாகர்கோவில் என பல்வேறு வழித்தடங்களில், அதிவேக தனியார் பஸ்களால் அதிக விபத்துகள் நடந்து வருகிறது. தேனி, மதுரையில் நடக்கும் விபத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், வாகனங்களின் வேகம் கண்டறிய நெடுஞ்சாலைகளில் எத்தனை ரேடார் கேமராக்கள் உள்ளன? என கலெக்டர்களுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

    Advertisement

    இன்றைக்கு தனியார் பேருந்துகள் எல்லாமே குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து நிலையத்தில் டைம் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிவிரைவாக செல்கின்றன. கோவை பொள்ளாச்சி வழித்தடம், சேலம் ஆத்தூர் வழித்தடம், சேலம் தர்மபுரி வழித்தடம், ஈரோடு சேலம் வழித்தடம், கோவை திருப்பூர் வழித்தடம், மதுரை பரமக்குடி வழித்தடம், மதுரை டூ தேனி வழித்தடம், திண்டுக்கல் டூ பழனி வழித்தடம், திண்டுக்கல் டூ திருச்சி வழித்தடம், கடலூர் டூ கள்ளக்குறிச்சி வழித்தடம், நாகர்கோவில் நெல்லை வழித்தடம் என பல வழித்தடங்களில் பேருந்துகள் அசுர வேகத்தில் செல்கின்றன. அப்படி செல்லும் பேருந்துகளால் ஏரளமான விபத்துக்களும் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

    Advertisement

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலை கிராமத்தை சேர்ந்த வக்கீல் பிரவீன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறுகையில், "மதுரை உயர்நீதிமன்றத்தில் நான் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். வாரத்திற்கு ஒருமுறை எனது சொந்த கிராமத்திற்கு சென்று வருவது வழக்கம். மதுரை-தேனி சாலையில் பயணம் செய்யும்போது, மதுரைக்கும், தேனிக்கும் இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகள் ஆபத்தான வகையில் மிக அதிவேகமாக செல்கின்றன. இதனால் இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன. கணிசமான உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

    Advertisement

    மதுரை முதல் தேனி, கம்பம், குமுளி, போடிநாயக்கனூர் மற்றும் தேவாரம் வரையிலான வழித்தடங்களில் தினமும் 15 தனியார் பேருந்துகள், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை இயக்கப்படுகின்றன. அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் இந்த தனியார் பேருந்துகள், அரசு பஸ்களுடன் தினமும் போட்டியிடுகின்றன. அதிக சத்தமிடும் ஒலிப்பானை பயன்படுத்தி பொறுப்பற்ற முறையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி பயணிகளின் உயிரை பணயம் வைப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் நான் மதுரை தேனி வழித்தடத்தில் விபத்துகள் குறித்த தகவல்களை பெற்றேன். அந்த தகவல்களின்படி, 2018 முதல் 2026-ம் ஆண்டு வரை தேனி-மதுரை நெடுஞ்சாலையில் 460-க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் நடந்து உள்ளன. தேனி மற்றும் உசிலம்பட்டிக்கு இடையிலான 39 கி.மீ தூரத்தை கடக்க வழக்கமாக 45 நிமிடம் ஆகிறது. ஆனால் இந்த தூரத்தை தேனி வழித்தடத்தில் செல்லும் தனியா பஸ்கள் வெறும் 30 நிமிடத்திலேயே கடந்துவிடுகின்றன. இதை கட்டுப்படுத்த ஒவ்வொரு தனியார் பஸ்சிலும் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்துவதை கட்டாயமாக்கி, அதிகாரிகள் கண்காணிக்கும்படியும் இந்த வழித்தடத்தில் கேமராக்களை பொருத்தவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "மோட்டார் வாகன சட்டப்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எத்தனை தானியங்கி வேகம் கண்டறியும் ரேடார் கேமராக்கள் மற்றும் வேக குறியீட்டு காட்சி அமைப்புகள் நிறுவப்பட்டு உள்ளன? என்பது குறித்தும், மதுரை-தேனி- போடி- கம்பம்- குமுளி மற்றும் தேவாரம் வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறித்த விவரங்களையும், இந்த பஸ்களை இயக்குபவர்களின் பெயர் விவரங்களையும் மதுரை, தேனி மாவட்ட கலெக்டர்கள், மதுரை-தேனி மாவட்டங்களின் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் ஆகியோர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    English Summary

    While hearing a case regarding accidents occurring in Theni and Madurai, High Court judges questioned the District Collectors about the number of radar cameras installed on highways to monitor vehicle speeds.