மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பட்டபகலில் நகைக்காக வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன் காதையும் அறுத்து தோடுகளை எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை - சிவகங்கை ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் வசித்து வருபவர்கள் ஈஸ்வரன், வசந்த மல்லிகா தம்பதியர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் ஒருவர் திருமணமாகி தேனியில் வசித்து வருகிறார். மற்றோருவர் மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து அங்கேயே வசித்து வருகிறார். வசந்தமல்லிகா சி.எஸ்.ஐ பள்ளி விடுதியில் வார்டனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
வசந்தமல்லிகாவின் கணவர் ஈஸ்வரன் ஆப்டிக்கல் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஈஸ்வரன் வழக்கம்போல் நேற்று ஆப்டிக்கல் கடைக்குச் சென்ற நிலையில் வசந்த மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயம் உள்ளே வந்த மர்ம நபர்கள் வசந்த மல்லிகாவில் பின் தலையில் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன் கழுத்தில் அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் காதை அறுத்து காதில் அனிந்திருந்த தோடுகளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மாலை 3 மணிக்கு வீடு திரும்பிய ஈஸ்வரன் உள்ளே மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மானாமதுரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினரை முடுக்கிவிட்டுள்ளார். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் நகைக்காக பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மானாமதுரை பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கழுத்தறுத்து கொலை
அதிர்ச்சி அடைந்த கணவர்
போலீஸ் விசாரணை