மதுரை: தமிழகத்தில் நேர்மையான ஆட்சி தொடரக்கூடாது என ஊழல் சக்திகள் ஒன்றிணைந்து சதி செய்கின்றன எனவும், எவ்வளவு பணம் கொட்டினாலும் தமிழக வெற்றி கழக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகத்திற்காக ஒவ்வொரு பாஜகவினரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.
மதுரை திருநகர் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவருமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்பொது பேசிய அவர்," எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியிலும், அதற்குப் பின்னர் நடைபெற்ற திமுக ஆட்சியிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான குற்றச் சம்பவங்கள் தொடர்பான விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ளார். இதேபோல் மற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் விவரங்களை வெளியிட்டால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளனவா அல்லது அதிகரித்துள்ளனவா என்பதை அறிய முடியும். மேகதாது அணை விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமார் தனது சுய அரசியல் லாபத்திற்காக மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்து வருகிறார். காவிரி பிரச்சினை தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சினை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருக்கிறது. கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அமைதியாக ஆதரவளித்து வருவது கண்டிக்கத்தக்கது. கர்நாடக விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழர்களுக்குத் துரோகம் செய்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகத்திற்காக ஒவ்வொரு பாஜகவினரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.முதலமைச்சர் உரிய நேரத்தில் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிவக்குமார் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணையாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் பாஜக தொடர்ந்து மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறது. சீமான் ஊர் ஊராகச் சென்று தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை. பல இடங்களில் அவருக்குத் தேர்தல் வைப்புத்தொகைகூடக் கிடைப்பதில்லை. தனது சொந்த ஊரான காரைக்குடியில்கூட வெற்றி பெற முடியாத நிலை. பல தேர்தல்களில் போட்டியிட்டும் இதுவரை ஒருமுறைகூட வெற்றி பெறவில்லை. தமிழக வெற்றி கழக அரசைக் கவிழ்க்க பாஜக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சி செய்து வருவதாக நிர்மல் குமார் கூறியிருக்கிறார். அத்தகைய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது உண்மைதான். சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த முயற்சி பலிக்காது. வெளிநாட்டுக்குச் சென்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் திரும்பி வந்த பின்னர் இந்த அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறுவார். தமிழகத்தில் நேர்மையான ஆட்சி தொடரக்கூடாது என்பதற்காக ஊழல் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளது. லஞ்சம் வாங்கியவர்கள், பணம் பெற்றவர்கள், மணல் கொள்ளை மற்றும் டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டவர்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த அரசைக் கவிழ்க்க முயற்சி செய்கின்றனர். இதற்காகப் பணப்பெட்டிகளுடன் அவர்கள் அலைந்து வருகின்றனர். இதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தச் சதித்திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் முறியடிக்கப்படும். இந்த அரசு நிலைக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கூறி வந்தாலும், தமிழக வெற்றிக் கழக அரசு நிச்சயம் கலைக்கப்படாது. எவ்வளவு பணம் கொட்டினாலும் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்றும், மீண்டும் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். லஞ்ச லாவண்யம் இல்லாத ஓர் அரசாங்கம் அமைய வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்" என்றார்.மாணிக்கம் தாகூர்
காவிரி பிரச்சினை
பாஜக
சீமான்
ஆட்சிக் கவிழ்ப்பு சதி
எம்எல்ஏக்களுக்கு பணம்
ஸ்டாலின்