மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பரபரப்பு.. சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து!

  • மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

    Advertisement

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுர வீதியில் அமைந்துள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    Advertisement

    மதுரையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றாக இருந்து வந்த இந்த திரையரங்கில், கொரோனா காலத்தின்போது திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பாக சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் நடித்த பழைய திரைப்படங்கள் அங்கு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வந்தது.

    செண்ட்ரல் திரையரங்கம் மூடப்பட்ட பின்னர், அந்த வளாகம் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாக திரையரங்கத்தின் முதல் தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கீழ் பகுதியில் கார் பார்க்கிங் ஆகவும் அந்த வளாகம் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சென்ட்ரல் திரையரங்க வளாகத்தின் முதல் தளத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அதிகளவில் புகை வெளியேறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் பகுதிக்கு வந்திருந்த நிலையில், கோவில் அருகே ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    தகவல் அறிந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    திரையரங்கம் தற்போது குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அங்கு மின் கசிவு காரணமாக பொருட்கள் தீப்பற்றி எரிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறை விசாரணைக்கு பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    A massive fire broke out at the Central Theatre, located near the Madurai Meenakshi Amman Temple. Firefighters rushed to the scene and extinguished the fire.