ஆயிரம் கோடி முதலீட்டை சாப்பிட்ட மேலூர் தம்பதி.. மூளை பெண் யார் தெரியுமா? ஆடிப்போன மதுரை விருதுநகர்

  • மதுரை: மதுரை மேலூர் தம்பதி தந்த அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. செல்போன் ஆப் மூலம் பணம் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் என்று ஆசை காட்டி, ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து சுமார் ரூ.1,000 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பேரிடம், இவ்வளவு பெரிய தொகையா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள கட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் FQL Exchange என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் என 4 மாவட்டங்களிலும் செயல்பட்டதாக தெரிகிறது. கடந்த சுமார் 7 மாதங்களாக இந்த மோசடி வலை செயல்பட்டு வந்ததாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது.

    Advertisement

    சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர்

    FQL, VG, Mains உள்ளிட்ட செல்போன் செயலிகளில் பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.50,000 வரை பணம் செலுத்தினால் அதற்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டியதாக கூறப்படுகிறது. இதை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

    இந்த பணம் ரொக்கம் மற்றும் GPay/UPI மூலமாகவும் வசூலிக்கப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதி USDT என்ற கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு FQL, VG Wallet-களுக்கு அனுப்பப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. Binance Wallet உள்ளிட்ட கிரிப்டோ வாலெட்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    மதுரை மேலூர் தம்பதி

    ஆரம்பத்தில் செயலியில் முதலீட்டாளர்களின் பணம் மற்றும் லாபம் இருப்பது போல காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திரும்பப் பெற முயன்றபோது Withdrawal செய்ய முடியவில்லை. கணக்கில் தெரிந்த பணத்தையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகும் சிலரிடம் மேலும் பணம் செலுத்துமாறு கூறப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.

    இந்த மோசடியில் 40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நத்தம் அருகே காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை வசூலித்த ஏஜென்டுகளிடம் சென்று முறையிட்டுள்ளனர். சில இடங்களில் ஏஜென்டுகளின் வீடுகளையும் முற்றுகையிட்டுள்ளனர். மேலூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடந்துள்ளன.

    Advertisement

    ஏஜெண்ட் தற்கொலையா?

    இந்த விவகாரத்தில் அதிர்ச்சி அளிக்கும் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. முதலீட்டாளர்களை சேர்த்ததாக கூறப்படும் உள்ளூர் ஏஜென்ட் ராஜா, பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு முதலீட்டாளர்கள் கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் முதற்கட்டமாக காசம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி அனிதா, விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வீரமணி, பிரேம்நாத், சுரேஷ், நவீன், ஜெயபிரகாஷ், மகாதேவன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 6 வழக்குகளில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    போலீஸ் பிடியில் தம்பதி

    இதையடுத்து வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. கிரிப்டோ பரிவர்த்தனைகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகமும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய நபர்களாக கருதப்பட்ட மேலூர் அருகே கட்டையம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினியை போலீஸார் தேடி வந்தனர். பிரியதர்ஷினிக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. தற்போது ரஞ்சித்-பிரியதர்ஷினி தம்பதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பிடியில் உள்ளனர்.

    சுமார் ரூ.1,000 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், உண்மையான மோசடி தொகை எவ்வளவு, யார் யார் இதன் பின்னணியில் உள்ளனர், முதலீட்டாளர்களின் பணம் எங்கு சென்றது, கிரிப்டோ மூலம் பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதா என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்...!!!

    English Summary

    Melur Couple ₹1,000 Crore Scam.. Who Is the Woman Behind the Operation? Madurai Virudhunagar Shocked