மதுரை: மதுரை சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற போகிறது. மேலூர் காரைக்குடியி இடையே சுமார் 1070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தேசிய நான்கு வழி நெடுஞ்சாலை பணிகள் ஆறு வருடங்களுக்குப் பிறகு நிறைவுற்றிருக்கிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த தேசிய நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.
மதுரை மாவட்டம் மேலூர் வழியாக காரைக்குடிக்கு விரைவாக செல்லும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு "மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா" திட்டத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ரூபாய் 659.03 கோடி மதிப்பீட்டில் தேசிய நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில் கொரோனா பரவல், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் கட்டுமான பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த நெடுஞ்சாலை அமைக்கும் பணி முடிவுறாமல் இருந்து வந்தது.
இதனால், மேலூர் - காரைக்குடி இடையே எஸ்.எஸ் கோட்டை, கீழவளவு வழியாக செல்லும் பழைய சாலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி வாகன விபத்துக்களும் நிகழ்ந்து வந்ததால், புதிய நான்குவழிச் சாலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மேலூர் - காரைக்குடி இடையே ஆன இந்த நான்குவழிச் சாலை பணிகளுக்காக கூடுதலாக 410.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிக்கள் 5 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுற்றது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ரூபாய் 1070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேலூர் - காரைக்குடி இடையே ஆன இந்த தேசிய நான்குவழிச் சாலை மதுரை மாவட்ட பகுதியில் 13 கிலோ மீட்டர் நீளத்திற்கும், சிவகங்கை மாவட்ட பகுதியில் 32 கிலோ மீட்டர் நீளம் என 45 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில், மேலூர் பகுதியில், மதுரை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் உயர் வட்ட மேம்பால சாலை அமைக்கட்டுள்ளது. மேலும் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் ஆற்றுபடுகை பகுதிகளில் 9 பெரிய பாலங்களும், 60கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயண தூரம் 14 கிலோ மீட்டர் குறைந்து 45 நிமிடத்தில் மேலூர் - காரைக்குடி இடையே பயணம் மேற்கொள்ளலாம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தேசிய நெடுஞ்சாலையில், திருக்கோஷ்டியூர் அருகே சுங்கச்சாவடி மற்றும் கனரக வாகன நிறுத்தம், பயணிகள் நிழற்குடை, ஓய்வறை என பல்வேறு வசதிகளுடன் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதால், இனி மேலூர் - காரைக்குடி இடையே உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்கள் பெருமளவில் குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாரத்மாலா திட்டம்
நரேந்திர மோடி
தேசிய நெடுஞ்சாலை
மேலூர் - காரைக்குடி