மதுரை: தவெக ஆட்சியை பிடித்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட, அறிவிக்கப்படாத சர்ச்சைகள் அதிகம் தான் வட்டமடிக்கிறது. சட்டமன்றத்தின் மாண்பை சிதைப்பது, அமைச்சர் போதை வீடியோ சர்ச்சை, உதவியாளருக்கு அரசு பதவி என்கிற வரிசையில் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. தமிழகத்தின் நலன் குறித்து பேச தமிழர் கிடைக்கவில்லையா என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வெங்கட் நாராயணா கர்நாடகாவை சேர்ந்தவரல்ல என்றும் எதற்காக அவரை அந்த பதவியில் நியமித்தார் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கியுள்ளார்.
மதுரையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவறான நபருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரல்ல. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கேயும் அவர் தொழில் தான் செய்து கொண்டிருந்தார். வெங்கட் நாராயணா தமிழகத்தில் வேலை செய்ய போவதில்லை. அவர் டெல்லியில் தான் பணியாற்ற போகிறார்.
அவர் எந்த முடிவுகளையும் எடுக்க போவதில்லை. அவர் எந்தத் திட்டத்திற்கு அனுமதியும் கொடுக்க போவதில்லை. டெல்லியில் தமிழக அரசின் ஒருங்கிணைப்பாளராக இருக்க போகிறார். நம்பத்தன்மையானவர்கள் ஒருங்கிணைப்பு பணி செய்வதில் தவறில்லை. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்களை முந்தைய காலங்களில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக போட்டுள்ளனர். அது தவறில்லை. முன்பு இதை ஒரு அலங்கார பதவியாக மட்டுமே வைத்திருந்தனர். எம்எல்ஏ பதவியில் வெற்றி பெறாதவர்களுக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்குவார்கள். தவெக ஆட்சியில் யார் நம்பகத்தன்மையுடன், பதவியை தவறாக பயன்படுத்தாத நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. வெங்கட் நாராயணா நம்பிக்கையானவர். பல அழுத்தங்களை கடந்து தலைவருடன் இருப்பவர். அவருக்கு பணம், பொறுப்பு ஒரு பெரிய விஷயம் இல்லை. அரசியலுக்காக இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் கர்நாடகாவை சேர்ந்தவர் இல்லை. வெங்கட் மிகவும் நம்பிக்கையானவர். பூதாகரமாக்குமளவுக்கு இதில் ஒன்றுமில்லை. அரசுக்கு ஒருங்கிணைப்பு பணியை மட்டுமே செய்வார். கடந்த 15 வருடங்களாக இதை பெரிய பொறுப்பாக காட்டிக் கொள்கிறார்கள். இது சிறிய பதவி தான். திமுக, அதிமுகவில் சம்பிரதாயத்துக்காக மட்டுமே அலங்கார பதவியாக வைத்திருந்தனர். வண்டி எல்லாம் கொடுத்தனர். இவருக்கு அதெல்லாம் தேவையில்லை. எல்லாமே இருக்கிறது. எல்லா அரசுகளும் ஆலோசகர்களை வைத்திருந்தனர். இந்த அரசை கொண்டு செல்வதற்கு கொள்கை ரீதியான முடிவுகளை பற்றி ஆலோசகர்களாக நியமிப்பதில் தவறில்லை. யார் யார் எந்த பொறுப்புக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்பதை பார்த்துதான் நியமித்துள்ளனர். பொறுத்தமில்லாதவர்கள் யாரையும் நியமிக்கவில்லை. இதை இவ்வளவு பெரிய விஷயமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை" என்றார்.அலங்கார பதவியாக
தவறே இல்லை