மதுரை: முதல்வர் விஜய் என்பதற்கு பதிலாக முதல்வர் தளபதி ஸ்டாலின் என்று அமைச்சர் விஸ்வநாதன் வாய்தவறி பேசினார். விஸ்வநாதன் அப்படி பேசிய உடனே அருகில் இருந்தவர்கள் முதல்வர் விஜய் என கூறியதும் திருத்தம் செய்து பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மேலூரிலும் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் மேலூரில், தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 59 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
"போதை இல்லா தமிழகம்" மற்றும் "பெண்கள் பாதுகாப்பு" குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த போட்டியை மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான விஸ்வநாதன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சி மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஓட்டம் மேலூரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. அப்போது விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:- தமிழகத்தில் அமைந்துள்ள 17 ஆவது சட்டமன்ற அமைச்சரவையில், 1967 க்கு பிறகு 1977 க்கு பிறகு, 2026ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக உள்ள தளபதி ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சி வழங்க வாழ்த்துகிறேன். என்று பேசினார். முதல்வர் விஜய் என்பதற்கு பதிலாக முதல்வர் தளபதி ஸ்டாலின் என வாய் தவறி சொல்லிவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரிடம் முதல்வர் விஜய் என சொன்னவுடம் திருத்தம் செய்து விஸ்வநாதன் பேசினார். முன்னதாக விழா நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நிலையில், அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் தவெக நிர்வாகிகள் சிலர் மேடையில் நடனமாடினர். விஜய்யின் வாடி வாடி கைப்படாத சீடி, தளபதி கச்சேரி போன்ற சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடியது சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி விவாதத்தை கிளப்பின. இந்நிலையில் தான் முதல்வர் விஜய் என்பதற்கு பதில் முதல்வர் ஸ்டாலின் என பேசிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.