முக்குலத்தோர் அல்லாத சமூகங்களுக்கு டார்கெட் - பாஜகவின் 'பலே' வியூகம்.. திராவிட கட்சிகளுக்கு சிக்கலா?


மதுரை: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக மதுரை வந்திருக்கும் சூழலில், அங்கு முத்தரையர் சமூகத்தினரின் மாநாடு நடைபெறுவது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற சூழலில், மத்திய மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள முத்தரையர் சமூகத்தின் ஆதரவைக் கைப்பற்ற அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன.

பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் பெரிய மற்றும் சிறிய சங்கங்கள், அமைப்புகள் போன்றவற்றின் ஆதரவை இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுக எப்படியாவது பெற்றுவிடும். இதற்கு கைமாறாக, தேர்தலின் போது ஏதாவது ஒரு சீட் கொடுத்து சரி கட்டுவார்கள். ஏனெனில், இதுபோன்ற சமூக அமைப்புகளின் ஆதரவு அக்கட்சிகளுக்கு தேவை.

வலையர் வாழ்வுரிமை மாநாடு

அதன்படி திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பரவலாக வசிக்கும் முத்தரையர்களின் ஆதரவைப் பெறுவதில் அதிமுக முனைப்போடு உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் பெரும்பிடுகு முத்தரையரை தங்கள் தலைவராக அந்த சமூகத்தினர் கொண்டாடுகின்றனர். முத்தரையர்கள் தங்களை முத்துராஜ் என்றும் வலையர் என்றும் அழைக்கின்றனர்.

சூடுபிடிக்கும் அரசியல் களம்

இந்த சூழலில்தான், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே.செல்வக்குமார், 'வலையர் வாழ்வுரிமை மாநாடு'' என்கிற பெயரில் இன்று மதுரை ஒத்தக்கடையில் மாநாடு நடத்தவிருக்கிறார். இந்த மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள், தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் இட்டாலா ராஜேந்தர் முதிராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பண்டா பிரகாஷ் முதிராஜ், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு

ஒரு சமூக அமைப்பு நடத்தும் மாநாட்டில் முதல்வர், அமைச்சர்கள், அண்டை மாநில தலைவர்கள் என்று பெரும் பட்டாளமே கலந்து கொள்வதால், ஏற்கனவே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் தமிழக அரசியல் களத்தில் 'ஆடிங் ஃபியூயல்' ரகமாக இது அமைந்துள்ளது. 1979ல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த குழ.செல்லையா, தன்னுடைய முத்தரையர்கள் சங்கம் சார்பாக, புதுக்கோட்டையில் முத்தரையர்கள் மாநாட்டை நடத்தினார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஜெ.பி.நட்டாவுடன் சந்திப்பு

அதற்கு பிறகு, இந்த தேர்தலை முன்னிட்டு, தற்போது நடக்கும் முத்தரையர் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி, இரண்டு நாள் பயணமாக மதுரை வந்திருக்கும் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து, முத்தரையர்களின் கோரிக்கை தொடர்பாக பேசுவதற்கு கே.கே.செல்வக்குமாருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க, முத்தரையர்களின் மாநாடு வெற்றியடைய பா.ஜ.க-வின் கலைப்பிரிவுச் செயலாளர் காயத்ரி ரகுராம் வாழ்த்து தெரிவித்திருப்பதையும் நாம் காண முடிகிறது.

பாஜக டார்கெட்

கூட்டிக் கழித்து பார்த்தால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் அல்லாத சமூக அமைப்புகளை கட்டமைக்கும் பாஜகவின் வியூகத்தின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகிறது. இதன் மூலம், இந்த பகுதிகளில் திராவிட கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்றும் பாஜக நம்புகிறது.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

English Summary

mutharaiyar community valaiyar vaazhvurimai manaadu - Report
Read more...