கிருஷ்ணசாமியின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.. 30 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை! தவெக அரசு நடவடிக்கை

  • மதுரை: "எனக்கு கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தவெக அரசு வந்த பிறகு போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது" என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவை வீழ்த்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக விஜய் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுவந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திமுகவினர், இது அரசியல் பழிவாங்கும் செயல் என கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தான் மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முக ஸ்டாலின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கிருஷ்ணசாமி கூறியதாவது: "1996ல் இருந்து 30 ஆண்டுகளாக எனக்கு 24 மணி நேர பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தவெக அரசு வந்ததும் அந்தப் பாதுகாப்பை எடுத்துவிட்டார்கள்'' என்றார்.

    Advertisement

    இதையடுத்து ''மக்களுக்காக நிறைய போராட்டங்கள் நடத்துகிறீர்கள். இருப்பினும் கேபினட்டில் சேர முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறதா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு கிருஷ்ணசாமி, '' நாங்கள் சமூக மாற்றங்களை தான் விரும்புகிறோம். தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் என்பதை கைவிட்டு என்னால் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும்.

    ஆனால் மக்களின் சுய மரியாதையை மீட்டெடுக்க 20 ஆண்டுகள் செலவழித்தோம். அரசியலில் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஓரளவு சமுதாயத்தை ஒன்றிணைத்துள்ளோம். அடுத்தக்கட்டமாக அரசியலில் ஜொலிப்பதற்கான வியூகம் வகுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    முன்னதாக, தமிழகத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக மறுஆய்வு கூட்டம் நடந்தது. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், உளவுப் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க், பாதுகாப்பு பிரிவு டிஐஜி தர்மராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    அதில் முக ஸ்டாலினுக்கான பாதுகாப்பை இசட் பிளஸ் பிரிவிலிருந்து இசட் பிரிவாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம் முக ஸ்டாலின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 58 பேரின் எண்ணிக்கை 33 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தான் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது'' என்றார்.

    English Summary

    Puthiya Tamilagam Krishansamy says that, "The police protection that had been provided to me for the past several years has been withdrawn. The security cover was removed after the TVK government came to power".