நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி! இளம்பெண்களிடம் அத்துமீறல்! மேல் முறையீட்டில் ஐகோர்ட் அதிரடி

  • சென்னை: இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட காசிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்து உத்தரவிட்டது.

    அப்போது கூறிய நீதிபதிகள், "சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை பகிர்வதில் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், எவ்வளவு நம்பினாலும் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

    ஆபாச படங்கள் எடுத்து மிரட்டல்

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி (வயது 20). கடந்த 2020ஆம் ஆண்டு இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை, பண மோசடி புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் பல ரகசியங்கள் வெளிவந்தன.

    அதாவது இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்து, அவர்களுடன் நெருக்கமாக பழகி பின்னர் அதனை வீடியோவாக எடுத்துக் கொள்வது, அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி மிரட்டி பெண்களிடம் பணம் பறித்து வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கோட்டார், வடச்சேரி, கன்னியாகுமரி, நாகர்கோவில் என பல்வேறு பகுதிகளில் காசி மீது பாலியல் வழக்கு, கந்து வட்டி வழக்கு என 7 வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் உத்தரவு

    இதையடுத்து இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அப்போது போலீசார் விசாரணையில் காசியின் செல்போனில், 400 ஆபாச வீடியோக்கள், 1900 நிர்வாணப் படங்கள் இருந்தது. தொடர்ந்து காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியன் கைதானார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

    நாகர்கோவில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காசி தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று ஐகோர்ட் நீதிபதிகள், காசிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    பாலியல் குற்றவாளி

    "இந்த வழக்கானது திட்டமிட்ட காதல் மோசடிக்கு உதாரணம். இளம்பெண்களின் நம்பிக்கை, உணர்வுகள், பொருளாதார தேவை எல்லாவற்றையும் மனுதாரர் தனக்கு சாதகமாக அனைத்து வழிகளிலும் பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் இது போன்ற இழிவான செயல்களை எல்லாம், வஞ்சகத்துடன் திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கிறார். மனுதாரரின் செயல்பாடுகள் எல்லாம், பெண்களை வேட்டையாடும் பாலியல் குற்றவாளி என்பதையே வெளிப்படுத்துகின்றது. எனவே மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை இந்த கோர்ட்டும் உறுதி செய்கிறது" என்று உத்தரவிட்டனர். மேலும் பெண்களுக்கு சில அறிவுரைகளையும் நீதிபதிகள் வழங்கினர்.

    தனிப்பட்ட வீடியோக்களை பகிர வேண்டாம்

    "சமூக வலைத்தளங்கள் எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும், பாலியல் ரீதியான சுரண்டல்களும் அரங்கேறுகிறது. இளம்பெண்கள் எவ்வளவு நம்பிக்கையாக பழகினாலும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளம் மூலமாக பகிரக் கூடாது. தற்போது வழங்கிய இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். எனவே இந்த தீர்ப்பு விவரம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்படும்" என்று கூறினர்.

    English Summary

    Nagercoil Kasi Case: The Madurai Bench of the Madras High Court upheld Kasi's life sentence till natural death and advised women not to share private photos or videos with anyone on social media, stressing the need for caution against sexual exploitation.