மதுரை: ஒரு கட்டிடம் கட்டி முடித்த சில வருடங்களிலேயே அதை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் எவ்வளவு பணம் வீணாகும்? அதுவும் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுக் கட்டிடங்களை இப்படி இடிப்பது சரியான அணுகுமுறையா? நாகர்கோவிலில் எழுந்த ஒரு வழக்கு, பொதுக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் அரசின் திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும் என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவர், நாகர்கோவில் நகராட்சி சந்தையில் கடை நடத்தி வருகிறார். இந்த சந்தை வளாகம் 2015-ம் வருடம் கட்டப்பட்டு, 2017-ம் வருடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
அரசு சார்பில் கட்டப்படும் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்கள் பொதுவாக 30 முதல் 50 வருடங்கள் வரை பயன்பாட்டில் இருக்கும் வகையில் திட்டமிட்டு கட்டப்பட வேண்டும் என்பது மனுதாரரின் வாதம். ஆனால், சந்தை திறக்கப்பட்டு சில வருடங்களிலேயே அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போதைய சந்தை கட்டிடத்தை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி குமார், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. இந்தமனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், நாகர்கோவில் சந்தை வளாகத்தில் மொத்தம் 260 கடைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக இதில் 150 கடைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளன. அந்த இடத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு மாற்று இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுக் கட்டமைப்புகளை உருவாக்கும்போது எதிர்கால தேவைகளையும் கணக்கில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினர். நீதிபதிகள் தன்னுடைய உத்தரவில், "பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புகளை உருவாக்கும்போது, தற்போதைய தேவைகளை மட்டும் பார்க்காமல், எதிர்கால விரிவாக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே போதுமான இடவசதியுடன் திட்டமிடாமல் கட்டிடங்களை கட்டிவிட்டு, பிறகு 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் அவற்றை இடித்துத் தள்ளுவது பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும். அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போதே தொலைநோக்குப் பார்வையுடன் போதுமான நிலத்தை தேர்வு செய்து கையகப்படுத்த வேண்டும். இத்தகைய முறையான அணுகுமுறை மட்டுமே முன்கூட்டியே கட்டடங்கள் இடிக்கப்படுவதைத் தடுப்பதோடு, மக்கள் வரிப்பணத்தின் நிலையான மற்றும் பயனுள்ள பயன்பாட்டை உறுதி செய்யும் மேலும், எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவைகள் ஏற்படும்போது இடவசதி பிரச்சினை வராமல் அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.. இந்த வழக்கில் வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை.. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர். இதன் மூலம் நாகர்கோவில் சந்தை கட்டிடம் தொடர்பான மனு முடித்து வைக்கப்பட்டது. அதே நேரத்தில், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களை அமைக்கும்போது எதிர்கால தேவைகளையும் கணக்கில் கொண்டு திட்டமிட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்த உத்தரவு எடுத்துரைத்துள்ளது.கன்னியாகுமரி நாகர்கோவில் சந்தை
நீதிமன்றம் கருத்து
நிலம் கையகப்படுத்துதல்