இனி அண்ணா அறிவாலயத்திற்கு வெள்ளை அடிச்சி வாடகைக்கு விட்டுருவாங்க! நிர்மல் குமார் அட்டாக்

  • மதுரை: இனி அண்ணா அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்துவிட்டு வாடகைக்கு விட்டுவிட வேண்டியதுதான் என அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் கிராம மக்கள் நடந்து சென்று விராதனூர் கிராமத்திலிருந்து பணிகளுக்கும், பள்ளிகளுக்கும் சென்று வந்தனர்.

    Advertisement

    தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி செய்து தரக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை சந்தித்து மனு அளித்த நிலையில், உடனடியாக 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர், முத்தாங்குளம் கிராமத்திலிருந்து சிந்தாமணி வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை கிராம மக்களுடன் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கிராம சிறுவர்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்கள் போல் வேடமணிந்திருந்த நிலையில், அவர்களுடன் அமைச்சர் சி.டி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    Advertisement

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், பேருந்து வசதி இல்லாமல் இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறி விட்டதாகவும், கடந்த காலங்களில் பெண் குழந்தைகள் எட்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடத்தை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.

    இது அடிப்படை வசதி என்றும், இதைக்கூட செய்யாமல் கடந்த ஆட்சியில் இருந்து உள்ளதாகவும், தற்போது அதனை நிறைவேற்றி உள்ளதாகவும் கூறினார்.

    சட்டசபையில் பேசத் தெரியாமல் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மானியக் கோரிக்கையில் என்ன நடைமுறையோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்றும், தேவையில்லாததை அவர்கள் பேசும்போது அதற்கான பதிலை நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    அவர்களுக்கு ஊழல் என்றாலே கோபம் வருகிறது என்றும், கட்சி நிதி என்றால் கோபம் வருகிறது என்றும் கூறிய அமைச்சர், லஞ்சம் இல்லாமல் ஏதாவது ஒரு சான்றிதழை பெற முடியுமா?, பிறப்பு முதல் இறப்பு வரை அரசு அலுவலகங்களில் ஒரு கையெழுத்தை பணம் இல்லாமல் பெற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

    தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் வாங்கப்படுகிறது என்றால் அது யாருக்கு போகிறது என்றும் கேள்வி எழுப்பிய அவர், ஆதாரமில்லாமல் எந்த வழக்கையும் தொடங்க முடியாது என்றும், தவறுகள் இருந்தால் கண்டிப்பாக வழக்கு தொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    டிரான்ஸ்பார்மர் வழக்கு மூன்று வருடமாக கிடப்பில் உள்ளதாகவும் கூறினார். மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது, ஏன் வழக்கு தொடுக்கவில்லை என நீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது என்றும், இவர்களை பழிவாங்க வேண்டும் என்ற அவசியமில்லை, மக்கள் தான் பலி வாங்கி விட்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகள் கார் வேண்டாம் என்று கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "30 கோடி, 40 கோடி ரூபாய் செலவு செய்து சட்டமன்ற உறுப்பினர்களாக வந்திருக்கிறார்கள். அவர்களிடம் 10 கார், 15 தொழில், ஆயிரம் கோடி பணம் இருக்கும். ஆனால் அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்பதில்லை.

    Advertisement

    இதற்கு முன் இந்த தொகுதியில் எத்தனை எம்எல்ஏக்கள் இருந்தார்கள், எத்தனை கார்கள் இருந்தன, அதனால் என்ன பயன் என்றும், இந்த ஊருக்குள் கால் எடுத்து வைக்கவில்லை. சொந்த தொகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு கூட செல்லாத எம்எல்ஏ 5 வருடம், 10 வருடம் பதவியில் இருந்து என்ன பிரயோஜனம்

    தொகுதிக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றால்தான் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது தெரியும். இந்த கிராமத்திற்கு முந்தைய ஆட்சியில் எந்த எம்எல்ஏவும், எந்த அமைச்சரும் வரவில்லை, அதனால் பஸ் வரவில்லை" என்றும் தெரிவித்தார்.

    திமுக பாஜகவுடன் சேர்வது போன்ற கருத்துக்கள் பரவி வருவது குறித்த கேள்விக்கு, அவர்கள் ஏற்கனவே பாஜகவுடன் சென்று விட்டார்கள் என்றும், பாஜகவின் முழு கட்டுப்பாட்டில்தான் திமுக உள்ளது என்றும் அமைச்சர் விமர்சித்தார்.

    தொகுதி மறுவரையறைக்கு எதிராக அவர்கள் வாக்களிக்கப் போகிறார்களா இல்லையா என்பது குறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட வரவில்லை என்றும் கூறினார்.

    எம்பிக்கள் சேர்ந்து ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள் என்றும், வருகிற தேர்தலில் தங்கள் கட்சியில் எம்பிக்கள் வந்தவுடன் இந்தியா கூட்டணியில் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

    முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தீயசக்தியான திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என கூறினார்கள். அதற்காகவே எம்ஜிஆர் கட்சி தொடங்கினார். ஆனால் தற்போது திமுகவை விஜய் முற்றிலும் ஒழித்துவிட்டார்.

    இனி அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். எனவே இனி நாம் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம். இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Ministre Nirmal kumar says that Anna Arivalayam can be white washed and rented out as DMK lost in Election. Hereafter no political future for them.