மாட்டுத்தாவணியில் பயணிகள் திடீர் மறியல்! விடிய விடிய காத்திருந்தும் பேருந்துகள் வராததால் போராட்டம்!

  • மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பபம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு முதல் விடிய விடிய காத்திருந்த பொதுமக்கள், போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    மதுரையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்குச் செல்வதற்காக நேற்றிரவு முதலே ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் குவிந்தனர். சிறப்புப் பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல மணி நேரம் காத்திருந்தும் குறிப்பிட்ட ஊர்களுக்குச் செல்ல ஒரு பேருந்து கூட வரவில்லை எனக் கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விடிய விடிய பேருந்து நிலையத்திலேயே தங்கும் அவலநிலை ஏற்பட்டது. போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று காலை பேருந்து நிலையத்தின் நுழைவாயில் மற்றும் வெளிச்சாலையில் திரண்டு திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இதுகுறித்து பயணி ஒருவர் பேசுகையில், நேற்று இரவு 9 மணிக்கு வந்தோம். விடியற்காலை 6 மணி ஆகியும் கோவைக்கு ஒரு பேருந்து கூட வரவில்லை. தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட மூன்று மடங்கு கட்டணம் கேட்கிறார்கள். அரசுப் பேருந்துகளை நம்பி வந்த எங்களை விடிய விடிய தவிக்கவிட்டுவிட்டார்கள் என்று வேதனை தெரிவித்தார்.

    Advertisement

    மறியல் போராட்டம் காரணமாக மாட்டுத்தாவணி சந்திப்பில் பெரும் பதற்றம் நிலவியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பயணிகளின் கோரிக்கை நியாயமானது என்பதை உணர்ந்த போலீசார், உடனடியாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அவசர அவசரமாக மாற்றுப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

    பேருந்து நிலைய நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் விடுமுறை தின நெரிசலை முன்கூட்டியே கணித்து கூடுதல் பேருந்துகளை இயக்காததே இந்த மறியலுக்குக் காரணம் எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலிலும், வார இறுதிநாட்களின் நெரிசல் காரணமாகவும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

    English Summary

    Passengers Wait All Night, Stage Flash Protest at Madurai Mattuthavani Bus Stand Over Shortage of Buses