Solomon Pappaiah: அன்பு பெரியோர்களே! அருமை தாய்மார்களே! பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்!

  • மதுரை: பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 90. பேராசிரியர், எழுத்தாளர், பட்டிமன்ற நடுவர், நடிகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர்.

    Advertisement

    சாலமன் பாப்பையாவுக்கு அண்மைக்காலமாக வயோதிக பிரச்சினைகளால் அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.30 மணி அளவில் காலமானார்.

    Advertisement

    சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் தமிழ் பற்றாளர்களும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சாலமன் பாப்பையாவுக்கு மகள் விமலா சாலமன், மகன் தியாகமூர்த்தி ஆகியோர் உள்ளனர். இவரது மனைவி ஜெயா பாய் கடந்த ஆண்டு காலமானார்.

    சாலமன் பாப்பையா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணிபுரிந்தவர். கல்லூரியில் நாடகங்களையும் நடத்தியுள்ளார். புதுக்கோட்டையில் முதல் மேடை பேச்சை சாலமன் பாப்பையா நிகழ்த்தினார். தனது குரு ஜோதிமுத்துவின் வழிகாட்டுதலுக்கேற்ப இளம் வயதிலேயே மேடை ஏறிப் பேசியவர்.

    2000ஆம் ஆண்டு சாலமன் பாப்பையாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. உலகமெங்கும் தமிழை கொண்டு சேர்த்தமைக்காக 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்றவர். பாய்ஸ், சிவாஜி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். திருக்குறள், கம்பராமாயணத்திற்கு எளிய நடையில் விளக்க உரை எழுதியவர்.

    Advertisement

    சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற பேச்சால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். பட்டிமன்றங்களில் நகைச்சுவையாக பேசுவதிலும் கவுன்ட்டர் கொடுப்பதிலும் வல்லவர்.

    முத்தமிழறிஞர், தமிழறிஞர், சொல்வேந்தர் , நகைச்சுவை நாவலர், இயற்செல்வம், பட்டிமன்ற பேரரசு, திருக்குறள் செம்மல் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

    7000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பேசியிருக்கிறார். அதில் பெரும்பாலான பட்டிமன்றங்களில் நடுவராக இருந்தார். எளியோருக்கும் புரியும் வகையில் தமிழை கையாள்வார். அதிலும் மதுரை தமிழில் அவர் கொடுக்கும் நகைச்சுவைகளை கேட்டு சிரித்துக் கொண்டே இருக்கலாம்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி பிறந்தார் சாலமன் பாப்பையா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ் மீது தீராத காதல் கொண்டவர்.

    Advertisement

    30 ஆண்டுளுக்கும் மேலாக டிவி பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து வந்தார். சாலமன் பாப்பையா எழுதிய "உரை மலர்கள்" என்ற புத்தகம் பல்கலைக்கழகத்தில் பாடமாக உள்ளது. மதுரை வளவன் என்ற பெயரில் இடதுசாரி கருத்துகளை எழுதியிருந்தார்.

    தான் பயின்ற மதுரை ஆரப்பாளையம் பள்ளிக்கு ரூ 20 லட்சம் நன்கொடையாக கொடுத்தவர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார். சமுதாயம், குடும்பப் பிரச்சினை சார்ந்த தலைப்புகளை முன் வைத்து பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார். திருக்குறள் கழகத் தலைவர், கம்பன் கழகத் தலைவராகவும் இருந்தவர். தனது பட்டிமன்றங்களில் "அன்பு பெரியோர்களே.. அருமை தாய்மார்களே.." என இவர் தனது பட்டிமன்றத்தில் பயன்படுத்தும் சொல்லாடல் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றது. இவரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரழிப்பு. சாலமன் பாப்பையா இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் பேச்சாளர் பாரதி பாஸ்கர் கண்ணீர் விட்டு அழுதார். தனது தந்தையை இழந்துவிட்டதை போல் உணர்வதாகவும் ஆதரவின்றி இருப்பதை போல் கலங்குவதாகவும் தெரிவித்தார்.

    English Summary

    Pattimandra Naduvar and Tamil Arignar Solomon Pappaiah died of age related ailments at the age of 90. He was getting treatment at Madurai private hospital.