மதுரை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இண்டாம் இடத்தை பிடித்தது. அதிமுகவின் தோல்வி பேசு பொருளாகியுள்ளது. அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்எல்ஏக்கள் தவெக வரப்போவதாக செங்கோட்டையன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதேபோல முன்பு அதிமுக ஆட்சியில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சி மாறினர். அதை முதலமைச்சர் விஜயின் ட்ரேட்மார்க் பன்ச் டைலாக்குடன் இணைத்து, அதிமுகவுக்கு பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சருக்கு வரும் மக்கள் கூட்டத்தை பற்றி தேமுதிகவிடம் கேட்காதீங்க. அது எங்களுக்கு பழக்கப்பட்டது. 40 ஆண்டுகளாக கேப்டன் கூடவே இருந்த பார்த்து பழகியவர்கள் நாங்கள். அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய போவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதே சூழ்நிலையை முன்பு தேமுதிக சந்தித்தது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை கேப்டன் எப்போதும் சொல்லுவார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்வான் என்பதை கேப்டன் அடிக்கடி சொல்லுவார். வாழ்க்கை ஒரு வட்டம் சார். நாம் என்ன செய்கிறோமோ அதுதான். விதைவிதைத்தால் விதை அறுப்போம். வினைவிதைத்தால் வினை அறுப்போம். சட்டசபையில் குதிரை பேரத்தை பற்றி முதலில் பேசியதே நான் தான். இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதை என்னிடம் கேள்விகேட்டு தான் தெரிய வேண்டும் என்பதில்லை. வெட்ட வெளிச்சமாக தெரிகின்ற விஷயம். இதை நிச்சயமாக தடுக்க வேண்டும். இது கண்டிப்பாக நல்ல முன் உதாரணம் இல்லை. எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. சென்னையில் அதிக மின்வெட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகம் உள்ளது. அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்வதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மின் கட்டணமும் உயர்கிறது. ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை தமிழகம் முழுவதும் பட்ட பகலில் நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை. ஆளுங்கட்சியில் இருப்போர் உரிய பதில் சொல்ல முடியும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது இயல்பான ஒன்று. தேர்தலில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெற்றார்கள். மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்க வேண்டும்" என்றார்.வினை விதைத்தால்
நடவடிக்கை தேவை
சட்டம் ஒழுங்கு