மதுரை: ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தேகம் கிளப்பியுள்ளார். முந்தைய ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் வாங்க குறைந்த விலையில் போடப்பட்ட டெண்டர் ரத்து செய்துவிட்டு, கூடுதல் விலைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே மின் வெட்டு நடந்து வருகிறது. பகல் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் மின் வெட்டு செய்யப்படுவதால், மக்கள் கொந்தளித்து வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகளவில் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் உச்சமாக நேற்று தலைமைச் செயலகத்திலேயே மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் அரசு நிர்வாகமே இருளில் மூழ்கியது. இதன் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. காற்றாலை மின்சாரம் குறைந்ததே இந்த மின் வெட்டுக்கு காரணமாக அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வெளிச் சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத் தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகா வாட் மின்சாரத்தை அவசர கால அடிப்படையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் விநியோக கழகம் சார்பில் டெண்டர் கோரப்பட்டது. அந்த டெண்டரில் அக்டோபர் 12 முதல் 31 வரையிலான காலத்திற்கு காலை உச்ச நேரங்களில் 1,500 மெகா வாட் மற்றும் மாலை உச்ச நேரங்களில் 3 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை அவசர கால அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.31.99 முதல் ரூ.37 வரை கொள்முதல் செய்ய தயாராக இருந்த நிலையில், ரூ.35க்கு கொள்முதல் செய்ய டெண்டர் இறுதியானது. திமுக ஆட்சியின் போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை கொடுத்து வாங்கப்பட்ட சூழலில், தற்போது கூடுதல் விலைக்கு டெண்டர் கொடுத்திருப்பது பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக முன்னாள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், முந்தைய ஆட்சியில் குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, தற்போது ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல் செய்வது என்பது நிர்வாகத்தில் ஏற்பட்ட தோல்வியாகவோ, திட்டமிடலில் நடந்த தோல்வியை காட்டுகிறது.. அல்லது மாபெரும் ஊழல் நடந்திருக்கலாம்.. இவை இரண்டுக்கும் கூட வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.