மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு.. எந்த கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதி? பொது தரிசனம் நேரம் என்ன?

  • மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவுக்கான தரிசன நேரம் மற்றும் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்களை மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பக்தர்கள் மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும், காலை 10 மணி முதல் பொது தரிசன அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நாளை காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஏற்கனவே மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக சிறப்பு ரயில்கள் விடப்பட்டிருக்கின்றன. அதேபோல் குடமுழுக்கு காண முன் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், இளஞ்சிவப்பு, பழுப்பு என்று ஒவ்வொரு நிறத்திற்கும், எந்தெந்த பகுதிகளில் இருந்து வர வேண்டும் என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    குடமுழுக்கு விழா காலையில் முடிவடைந்த பின், பொது தரிசனத்திற்கு காலை 10 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சித்திரை வீதிகளிலும் கோயிலுக்குள்ளும் பக்தர்கள் செல்ல தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் பக்தர்கள் மேற்கு மற்றும் தெற்கு கோபுரம் வழியாக உள்ளே செல்லலாம். கிழக்கு கோபுரம் வழியாக வெளியில் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் மொத்தமாக 53 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்கள் கட்டணமின்றி தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குடமுழுக்கு விழாவின் போது பாஸ் பெற்றவர்கள் மட்டுமே மேல்தளத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 11 ஆயிரம் விஐபி பாஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவற்றை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தவெக எம்எல்ஏ-க்கள் வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க இருப்பதால், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Public Darshan at Madurai Meenakshi Temple Consecration to Begin at 10 AM, Entry via West and South Towers