மதுரை: தமிழக அரசியல் களம் தேர்தல் முடிந்த பிறகும் இன்னமும் கொதித்து கொண்டேயிருக்கிறது.. இதற்கு அதிமுகவும் ஒரு முக்கிய காரணம்.. குறிப்பாக தவெக தலைவர் விஜயை நோக்கி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடுத்துள்ள கடுமையான விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக தொண்டர்களை இழுக்க தவெக மேற்கொள்ளும் தீவிரமான முயற்சிகளும், அதற்கு எதிராக அதிமுக தலைமை காட்டும் கோபமுமே இந்த காரசார தாக்குதலுக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
ஆட்சிக்கு விஜய் வந்ததிலிருந்தே, அதிமுகவை உடைக்கும் நோக்கில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.. தேர்தல் தோல்வியைவிடவும், தங்கள் கட்சியை தவெக கரைத்து வருவதை அதிமுக மேலிடத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை.. போதாக்குறைக்கு அதிமுகவுக்குள்ளேயே பலரும் தவெக, பாஜகவுக்கு ஆதரவாக இருந்துவருவதும் மேலிடத்தை கோபப்படவே செய்து வருகிறது.
இதையெல்லாம்தான் அதிமுகவின் மூத்த தலைவர் ஆர்பி உதயகுமார் தன்னுடைய பேட்டிகளில் காட்டமாக விமர்சித்து வருகிறார்... "சனிக்கிழமை தோறும் தவெக ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபடுவது தூண்டிலில் புழுவை வைத்து மீனைப் பிடிப்பதைப் போன்றது.. எந்த கவர்ச்சியும் வசீகரமும் நிரந்தரமானது அல்ல.. எந்த தகுதியும் இல்லாத விஜய் ஆட்சியில் அமர ஜென்சி தலைமுறையை தவறாக மூளைச்சலவை செய்ததே காரணம். 107 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து முதல்வர் விஜய் பெயரை சரியாக சொல்லிவிட்டால் நான் பொதுவாழ்க்கையில் இருந்து சென்றுவிடுகிறேன்.. எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலரும்; அதற்காக பொறுமையாக காத்திருப்போம்" என்று ஆர்பி உதயகுமார் தன்னுடைய பேட்டிகளில் தொடர்ந்து கூறி வருகிறார். இப்போதுகூட ஒரு வீடியோ வெளியிட்டு, விஜய்யை தாக்கி பேசியிருக்கிறார் உதயகுமார். இதற்காக ஒரு வீடியோவையும் பிரத்யேகமாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோ பதிவில், "விஜய்க்கு கூட்டணி கட்சிகள் பல்லாக்கு தூக்கி, பாசுரம் பாடி வருகின்றன. தேர்தலுக்கு முன்பாக விஜய்யை விமர்சித்தவர்கள் இன்றைக்கு புதிய உறவுக்கு நியாயம் கற்பித்திட கற்பனை கதைகளை அளந்து விட்டு கொண்டிருக்கிறார்கள்.. விஜய் தலைமையிலான தவெக அரசு வெறும் கவர்ச்சியும், வசீகரமும் உள்ள சைனா பொம்மை. இந்த பொம்மையை பயன்படுத்தும்போதுதான் இதன் ஆயுள் அற்ப ஆயுள் என்பது நமக்கு தெரியவரும். விஜய் அரசின் ஆயுட்காலம் எண்ணப்படுகிறது. இது ஜோசியம் இல்லை.. கள நிலவரத்தை சொல்கிறேன். பழநி கோயில் நிலம் பத்திரப்பதிவு முதல் பணி மாறுதல் வரை எல்லாமும் திட்டமிட்டு திரைக்கதை போல நடந்துள்ளது. இதற்கு இதுவரை விஜய் விளக்கம் சொல்லவில்லை. ஏனென்றால் ஸ்கிரிப்ட் இல்லாமல் அவரால் பேச முடியாது. பெரிய அதிகாரபலம் இல்லாமல், சட்டவிரோதமாக கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து விடமுடியுமா? அந்த அதிகாரம் மையம் யார் என்ற கேள்விக்கு ஸ்கிரிப்ட் இல்லாமல் பதிலளிக்க விஜய் தயாரா? நான் சவால் விடுகிறேன். மேகதாது, பாலாறு, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, மின்வெட்டு பிரச்சனைகளை ஸ்கிரிப்ட் இல்லாமல் வாயைத் திறந்து கருத்துக்களை எடப்பாடி பழனிசாமியிடமோ, என்னிடமோ ஒரே மேடையிலே விவாதிக்க விஜய் தயாரா? இவ்வாறு சவால் விடுத்து பேசியிருக்கிறார்.. இந்த வீடியோவை அதிமுக தொண்டர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.அதிமுகவை கரைக்கும் தவெக?
ஆர்பி உதயகுமார் காட்டம்
விஜய்யின் சைனா பொம்மை அரசு