கோமாளி கூட்டத்தால் கோட்டையில் ஓட்டை.. உச்ச தலையில் ஆணி அடித்த ஹைகோர்ட்.. உதயகுமார்

  • மதுரை: கோமாளி கூட்டத்தை கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையில் ஓட்டை விழுந்து விடும்; சட்டத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ‌.க கட்சியை வளர்ப்பதற்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி அடி கிடைக்கும். உயர் நீதிமன்ற நீதியரசர்கள் த.வெ.க அரசிற்கு உச்சந் தலையில் ஆணி அடித்தால் போல் தீர்ப்பளித்துள்ளார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், "காவிரி டெல்டா பகுதியை வறட்சிப் பகுதியாக நாம் பார்க்கும்போது நம் நெஞ்சம் பதறுகிறது. கர்நாடகா தண்ணீரைத் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரைக் கொடுக்காததால், பயிர்கள் காய்வதைப் பார்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையைத் த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது?

    Advertisement

    உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நாம் பெற வேண்டிய உரிமை பறிபோய்க்கொண்டே இருக்கிறது. இதற்கு மேல்முறையீடு செய்யத் த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்குமா? ஏனென்றால் மேகதாது அணைப் பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. 'மேகதாது அணைக் கட்ட கர்நாடகாவுக்குத் தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை' என்ற பதிலை மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருப்பதால், தமிழகம் அதிர்ச்சியிலேயே உறைந்து போய் இருக்கிறது.

    இப்போது, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    Advertisement

    'தன்னைப் பார்க்க வந்தவர்கள் இறந்து போனார்கள் என்பதற்காக அரசு நிர்வாகத்தை எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம்' என்கிற கோமாளித்தனத்தை, தலையில் கொட்டு வைத்துச் சட்டத்தைப் புரியவைத்து, சட்டத்தின் ஆட்சிதான் என்றைக்கும் மேலோங்கி இருக்கும் என்பதை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இந்த நாட்டிற்கு உணர்த்தியுள்ளார்கள்.

    இந்தச் சட்டத்திற்குப் புறம்பான நியமனங்கள், அரசியலமைப்பின் 14 மற்றும் 16-வது பிரிவின் கீழ் இந்த நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் உத்தரவாதத்தை நேரடியாக மீறுகிறது. 'அரசின் கொள்கை முடிவு சட்டத்திற்கு எதிராக இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடலாம்' என்பதையும் உயர்நீதிமன்ற தீர்ப்பு கோமாளிக் கூட்டத்திற்கு உணர்த்தியிருக்கிறது.

    Advertisement

    நாட்டில் எத்தனையோ உயிர்கள் அசம்பாவிதங்களால், விபத்துகளால், எதிர்பாராத பேரிடர் காலங்களில் உயிரிழக்கும் போது, அவர்களுக்கெல்லாம் எப்படி அரசு வேலை தர முடியும்? அரசு வேலைக்காகக் கோடிக்கணக்கான பேர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்களே... என்கிற அந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த கோமாளிக் கூட்டத்தை வைத்துக்கொண்டு, எப்படி மேகதாது பிரச்சனையைச் சரிசெய்யப் போகிறோம்? காவிரி உரிமையைக் காப்பாற்றப் போகிறோம்? பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தப் போகிறோம்?

    சட்டஒழுங்கு சீரழிவை எப்படித் தடுக்கப் போகிறோம்? போதைப்பொருள் நடமாட்டத்தை எப்படி நாம் நிறுத்தப் போகிறோம்? என்று ஒன்றுமே நமக்கு புரியவில்லை. 'எங்களுக்கு சாரி வேண்டாம், நீதிதான் வேண்டும்' என்று லாக்கப் டெத்திற்குப் போர்க்குரல் எழுப்பிய முதல்வர் விஜய் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

    Advertisement

    இன்றைக்குத் தமிழகம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது? அணைகளில் தண்ணீர் பற்றாக்குறை, பாசன ஏரிகளில் நீர்ப்பற்றாக்குறை, நிதி நிலைமையிலே பற்றாக்குறை, கடனின் அளவு வானளவு உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கின்றன. இதற்கிடையே மூன்று நாட்கள், நான்கு நாட்கள் எனத் திடீர் திடீரென்று தலைமைச் செயலகத்தில் தலைகாட்டாமல் முதல்வர் விஜய் உள்ளார்.

    கோமாளிக் கூட்டத்திடம் இந்தக் கோட்டையை ஒப்படைத்தால் கோட்டையிலே ஓட்டை விழுந்துவிடுகிறது என்பதற்குத் தான், இன்றைக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு உச்சந்தலையில் ஆணி அடித்தாற்போல் வந்துள்ளது. மக்களின் பக்கம், சட்டத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம்தான் ஆட்சிச் சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ.க. கட்சியை வளர்ப்பதற்கு அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் இப்படித்தான் சம்மட்டி அடி கிடைக்கும் என்பதற்கு இந்த நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சியாக இருக்கிறது.

    Advertisement

    மொத்தத்தில் கோமாளிகளின் அரசாட்சி தமிழகத்தில் இன்றைக்கு நடைபெறுவதைப் பார்த்து, அண்டை மாநிலங்கள் சிரிப்பாய் சிரிப்பதை நாம் என்னவென்று சொல்வது? நம் ஜீவாதாரப் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க அக்கறை செலுத்துவாரா? 'மக்களுக்கு ஒண்ணுன்னா உங்க பிள்ளை விஜய் கேள்வி கேட்பார்' என்று சொன்னாரே... இப்போது எங்கே போனார்? முதல்வர் விஜய்யைத் தேடிக் கண்டுபிடித்துத் தருபவருக்கு பம்பர் பரிசு அறிவிக்க வேண்டுமா எனத் தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்," இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    English Summary

    Former AIADMK Minister R.B. Udhayakumar welcomes the verdict cancelling government job appointments in Karur