சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, இடப்பெயர்ச்சி .. எதிர்க்கட்சிகளுக்கு பட்டை நாமம் .. உதயகுமார் ஆவேசம்

  • மதுரை: தனிப் பெரும்பான்மை இல்லாத தவெக அரசு, தனிப் பெரும்பான்மையைப் பெற விஜய் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதைப் போல எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்குப் பட்டை நாமம் போட்டுவிடுகிறார். நாம் சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறார்கள். எந்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு இடப்பெயர்ச்சி ஆகி வருகிறார்களோ, அவர்களுக்கு மட்டும் பக்கம் பக்கமாக நலத்திட்டங்களைத் தவெக அரசு கொடுக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: "தவெக அரசு பொறுப்பேற்று இந்த 5 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இது அனைவருக்கும் கவலையை அளிப்பதாக இருக்கிறது.

    Advertisement

    புதிய அரசு பொறுப்பேற்றதும் ராக்கெட் வேகத்தில் செயல்பட வேண்டிய தவெக அரசு, புஸ்வாணம் போல் வண்ணம் வண்ணமாக ரீல்ஸ்களை வெளியிடுகிறது. அதில் தான் தங்களுடைய நேரத்தையும் அதிகாரத்தையும் செலவழிக்கிறார்கள். ஆக்கப்பூர்வமான பணிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

    துறைகள் தோறும் வளர்ச்சிப் பணிகள் மூலம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான புதிய அரசின் வேகத்தை நாம் இதுவரை பார்க்க முடியவில்லை. 5 மாதங்கள் கடந்துவிட்டன. 'எங்கும் அமைதி, எதிலும் அமைதி, எப்போதும் அமைதி' என முதல்வரின் உள்துறை ஆரம்பித்து உணவுத்துறை வரை கும்பகர்ண தூக்கத்தில் அமைதியாக இருப்பது மக்களுக்கு ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது.

    Advertisement
    சுள்ளான் மதன்கள் உருவாக காரணம் என்ன.. இன்ஸ்டா முதல் பிரபல இயக்குனர்கள் வரை.. திருந்த வேண்டியது யார்?

    தவெக அரசு ஏன் இந்த அமைதிப் புரட்சியைத் தன் அடையாளமாகவும் அணிகலனாகவும் அணிந்திருக்கிறது என்பதும் மக்களுக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது என்றால், 'அப்படி எதுவும் இல்லை' என்று சத்தியம் செய்கிறார் மின்சாரத் துறை அமைச்சர். வரலாறுகாணாத வகையில் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது என்றால், 'இங்கே அப்படி ஒன்றும் விலைவாசி உயரவில்லையே' என்று அமைச்சர் சத்தியம் செய்வதற்குத் தவறவில்லை.

    தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதலாகக் கொலை நடக்காத நாளே இல்லை என்று சுட்டிக்காட்டினால், "அப்படியா?" என்று ஆச்சரியமாகக் கேட்டுவிட்டு, "இது ஒன்றும் புதிதில்லை; எப்போதும் இங்கே நடப்பதுதானே" என்று மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிரடியாகப் புதிய விளக்கத்தைத் தருகிறது தவெக அரசு.

    Advertisement

    "தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?" என்று கேட்டால், "தமிழ்நாட்டின் கடன் சுமையில் இப்போது எங்களால் என்ன செய்ய முடியும்? இப்போதைக்கு முடிந்ததை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். செய்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரும் விமர்சனம் செய்யக்கூடாது, கேள்வி கேட்கக்கூடாது" என்கிறார்கள்.

    "பயிர்க்கடன் முழு தள்ளுபடி என்று சொன்னீர்கள்; ஆனால் பாதிதான் தள்ளுபடி செய்கிறீர்களே, ஏன்?" என்று விவசாயிகள் கேள்வி கேட்டால், "அந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாது" என்று சொல்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியாக 'அன்னபூரணி சூப்பர் 6' என்று வாக்குறுதி தந்துவிட்டு, இப்போது அதிகாரம் கைக்கு வந்த பின்பு "3 சிலிண்டர்கள் தருவோம்" என்று அறிவித்துள்ளார்கள்.

    Advertisement
    நர்ஸ் கொலை.. சுள்ளான் மதன் கொலை.. குழந்தைகள் கடத்தல்! தவெக ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு?

    "கடன் சுமைதான் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிடக் காரணமா?" என்று கேட்டால், விஜய்க்கு இது முன்பே தெரியுமே? தமிழ்நாட்டின் கடன் சுமை என்னவென்று தெரிந்தும், மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளைத் தந்துவிட்டாரா என்பதுதான் மக்களின் இப்போதைய கேள்வியாக உள்ளது. ஆனால் கேள்வியும் கேட்கக்கூடாது, விமர்சனமும் செய்யக்கூடாது என்கிறார்கள்.

    தற்போது தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலை மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    சாலைகளில் தள்ளுவண்டிக் கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, மட்டன் சுக்கா முதல் பாஸ்ட் ஃபுட் (Fast Food) உணவு வகைகள் அனைத்தும் ஏற்கனவே பல நாட்கள் பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. மேலும் உணவில் செயற்கை நிறமிகளையும், சுவைக்காகவும் பார்வைக்காகவும் ரசாயனங்களையும் அதிகம் சேர்ப்பதால், சுகாதாரமில்லாமலும் தரமில்லாமலும் தயாரிக்கப்படும் உணவுகள் தவெக ஆட்சியில் தமிழகம் எங்கும் வெகு சாதாரணமாக விற்கப்படுவதைப் பார்க்கிறோம்.

    மக்களும் இதை அறிந்தும் அறியாமலும், அவசரத்திற்கும் குறைந்த பட்ஜெட்டிற்கும் உணவு வேண்டும் என்கிற கட்டாயத்தில் உண்ணும் பழக்கத்தைப் பார்க்க முடிகிறது. அது பின்பு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்து விடுவது மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் தடுத்து, தமிழக மக்களுக்குக் கலப்பட உணவுகளிலிருந்து விடிவுகாலம் ஏற்படுத்த, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் உணவுத்துறை விழித்துக்கொண்டு இதுபோன்ற உணவுகளை உரிய ஆய்வு செய்ய வேண்டும்.

    எங்கே இதையெல்லாம் கவனிக்க நம் முதல்வருக்கு நேரம் இருக்கிறது? அவருக்குத்தான் தவெக அரசுக்குத் தேவையான பெரும்பான்மையை உறுதிசெய்யவே நேரம் போதவில்லையே! தனிப் பெரும்பான்மை இல்லாத தவெக அரசு, தனிப் பெரும்பான்மையைப் பெற விஜய் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதைப் போல எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்குப் பட்டை நாமம் போட்டுவிடுகிறார்.

    நாம் சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறார்கள். எந்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு இடப்பெயர்ச்சி ஆகி வருகிறார்களோ, அவர்களுக்கு மட்டும் பக்கம் பக்கமாக நலத்திட்டங்களைத் தவெக அரசு கொடுக்கிறது.

    'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை முதல்வர் விஜய் சொல்லில் மட்டும்தான் கடைபிடிக்கிறாரே தவிர, செயலில் இல்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது 'தவெகவிற்கு மட்டுமே' என்பதுதான் அவருடைய தாரக மந்திரமாக இருக்கிறது. முதல்வர் விஜய் எல்லோருக்கும் கருணைப் பார்வை காட்டுவாரா அல்லது தவெக தொகுதிக்கு மட்டும்தானா? இன்றைக்கு மதுராந்தகத்திற்கும் தாராபுரத்திற்கும் வாரி வழங்கியிருக்கிறார். கடந்த ஐந்து மாதங்களாக அது தவெக கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

    ஆகவே, இது எத்தைக் காட்டுகிறது என்றால், ஏற்கனவே குதிரை பேரம் நடைபெற்றிருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. "இப்பொழுது ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இங்கே இருக்க முடியும்; எதிர்க்கட்சிகள் எல்லாம் மூட்டை கட்டி ஜனநாயகத்திலிருந்து விலகிக் கொள்ளலாம்" என்பது ஒரு சர்வாதிகாரத்தின் தொடக்கம். விஜய் இன்றைக்கு அறிவித்திருக்கிற திட்டங்களை வரவேற்கிற அதேநேரத்தில், ஏன் இந்த பாரபட்சம்?

    ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்ப்பா? ஆளுங்கட்சிக்கு வெண்ணெய் கொடுக்கிற முதல்வர் விஜய், எதிர்க்கட்சிக்குச் சுண்ணாம்ப்பைத் தடவுவது ஜனநாயகத்திற்கு இலக்கணமா? 234 தொகுதிக்கும் அவர் முதல்வர் என்பதை மறந்துவிட்டாரா? தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் மட்டும்தான் இனி திட்டங்களைப் பெற முடியுமா என்கிற மிகப்பெரிய கேள்வியும், மறைமுகமான அரசியல் தத்துவமும் இன்றைய அறிவிப்பில் ஒளிந்திருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

    ஆகவே, முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பற்றிய அறிவிப்பு சுயநலமா, பொதுநலமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. அவர் 234 தொகுதிகளுக்கும் முதல்வரா அல்லது தவெகவிற்கு மட்டும் முதல்வரா?" என்று கூறினார்.

    English Summary

    R.B. Udhayakumar has questioned whether the welfare schemes announced by Chief Minister Vijay for Maduranathagam and Dharapuram—constituencies represented by opposition members who have since switched to the ruling party—are driven by self-interest or public interest. He further asked, "Is Vijay the Chief Minister for all 234 constituencies?"