அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன?

  • மதுரை: தவெகவை நோக்கி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் படையெடுக்க தொடங்கி இருக்கும் சூழலில், செல்லூர் ராஜூ அந்த திட்டத்தில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தவெகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு, கையில் இரட்டை இலை தான் எப்போதும் என்று சிக்னல் காட்டி விரைவாக அங்கிருந்து வெளியேறினார். தவெகவில் இணையக் கூடும் என்று பேசப்பட்ட சூழலில், செல்லூர் ராஜூவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

    Advertisement

    தமிழக அரசியல் களம் தற்போது புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தவெகவை நோக்கி அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவும் தவெக-வில் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்து வரும் சூழலில், நீங்களும் தவெகவில் இணையப் போகிறீர்களா? என்று செய்தியாளர்கள் நேரடியாகக் கேள்வி எழுப்பினர். இக்கேள்வியைக் கேட்டவுடன் 'இரட்டை இலை' சின்னத்தை விரல்களில் சைகையாக காட்டினார். "தனது மூச்சு இருக்கும் வரை இரட்டை இலை தான்" என்பதை செய்கையில் காட்டிவிட்டு, அங்கிருந்து வேகமாகத் தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.

    மதுரையில் பாஜகவினர் அதிமுகவை ஆதிக்கம் செலுத்த தொடங்கிய போது, செல்லூர் ராஜூ அதிருப்தியில் இருந்தார். அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமியின் காரில் இருந்தும் செல்லூர் ராஜூ இறக்கிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். இதனால் தேர்தலுக்கு பின் செல்லூர் ராஜூ மாற்று கட்சியை நோக்கி நகரக்கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்தன.

    Advertisement

    அதற்கேற்ப மதுரை கிழக்கு தொகுதியில் செல்லூர் ராஜூ தோல்வி அடைந்தார். இதனால் ஆளுங்கட்சி பக்கம் செல்லூர் ராஜூ நகர்வார் என்று சொல்லப்பட்டது. ஆனால் தவெகவில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களான கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி இருவருமே செல்லூர் ராஜூவுக்கு எதிராக இருக்கிறார்கள். அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரும் சீனியரான செல்லூர் ராஜூவை சேர்க்க உடன்படவில்லை.

    மதுரை அதிமுகவின் மும்மூர்த்திகளான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோரை தவெகவில் சேர்க்க கூடாது என்பதில் சிடிஆர் நிர்மல் குமார் தீவிரமாக இருக்கிறார். அவரது சொல்படியே நிர்வாகிகளும் இயங்க தொடங்கியுள்ளனர். இதனை செல்லூர் ராஜூ நன்றாக அறிந்து வைத்துள்ளார். இன்னொரு பக்கம் தவெகவில் இணையும் அதிமுகவினருக்கு உரிய மரியாதை இல்லை என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஜூனியர்களிடம் சென்று பதவியை பெற சீனியரான செல்லூர் ராஜூ விரும்பவில்லை. ஏற்கனவே அமைச்சர் பதவி வரை எட்டிவிட்டதால், இனி வேறு கட்சிக்கு செல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தவெக மீது அதிருப்தி அதிகமாகும் பட்சத்தில் செல்லூர் ராஜு, திமுகவை நோக்கி நகரலாம் என்று சிலர் பேசுகின்றனர்.

    English Summary

    Sellur Raju: CTR Nirmal Kumar Draws the Line in Madurai TVK as Sellur Raju Sticks to AIADMK